3/24/2009

எங்கே பிராமணன் பகுதிகள் - 36 & 37

பகுதி - 36 (23.03.2009):
நாதன்-அசோக் விவாதம் தொடர்கிறது. பிருகு மஹரிஷி ஒவ்வொரு முறையும் அவரது தந்தையின் சொற்படி தவம் செய்து படிப்படியாகத் தெளிவைப் பெறுகிறார். கடைசியில் ஆனந்தமே பிரும்மம் என்னும் முடிவுக்கும் வருகிறார் என அசோக் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறான். இப்ப என்ன சொல்ல வருகிறான் அசோக் என நாதன் பொறுமையிழந்து அவனிடம் கேட்கிறார். அவரைப் போன்ற லௌகீக மனம் கொண்டவர்கள் பிருகு முனிவரின் முதல் கட்டத்திலேயே தங்கி விடுகின்றனர், பௌதீக விஞ்ஞான விஷயங்களுக்கு மேல் போக மறுக்கின்றனர் என்பதை எடுத்துரைக்கிறான் அசோக்.

தான் தனது வயதுக்கேற்ப லௌகீகமாக வளர வேண்டும் என தன் தந்தை கூறுவதை வாதத்துக்காக ஒப்புக் கொள்வதாகக் கூறும் அசோக், அடுத்த கேள்வியை கேட்கிறான். நாதனுக்கு ஆன வயதுக்கு அவர் பற்றுக்களை துறக்க வேண்டும் என கூறப்படுவதை மட்டும் அவர் ஏற்க மறுத்து ஏன் இன்னமும் லௌகீகமாகவே இருக்க வேண்டும் என கேட்கிறான் அவன். அப்படியெல்லாம் ஆசாபாசங்களை ஒரேயடியாக துறந்திடல் இயலாது என நாதன் ஒரேயடியாக மறுக்கிறார். ஒவ்வொன்றாகத்தன் துறக்கவியலும் என நாதன் கூற, ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்ச்சியை அசோக் கூறுகிறான். அவரைப் பார்க்க வந்த பக்தரிடம் பற்றைத் துறக்க ஏதுவாக அவரிடம் ஒரு பை நிறைய தங்க நாணயங்களைத் தந்து அவற்றை அப்படியே கங்கையில் போடுமாறு கூறுகிறார். அவரும் ஒவ்வொரு நாணயமாக எறிய, அதைப் பார்த்த ராமகிருஷ்ணர் அப்படியே ஒட்டுமொத்தமாக எறிந்தால்தான் பற்றை முற்றுமாக துறக்கவியலும் எனக் கூறுகிறார்.

தன் மாமியாரைப் பார்க்க வரும் பிரியா தனக்கு தனிக்குடித்தனம் பிடிக்கவில்லை என்றும் தன் மாமியார் அவர் கணவரிடம் பேசி கூட்டுக் குடும்பத்துக்கே ஏற்பாடு செய்யச் சொல்லுமாறு கேட்கிறாள். மாமியாருக்கு சற்று தயக்கம்தான். இருப்பினும் தன் கணவரிடம் இது பற்றிப் பேசுவதாகக் கூறுகிறார்.

பாகவதர் வீட்டில் அவரது மருமகள் தன் மாமனார் மாமியார் தானும் தன் கணவனும் இல்லாத நேரத்தில் ராமசுப்புவை நல்லமுறையில் பார்த்து கொண்டு போலீஸ் தொந்திரவிலிருந்து காப்பாற்றியதற்கும் நன்றி கூறுகிறாள். ராமசுப்புவிற்கு ஹாஸ்டலில் வேறு ரூமை வார்டனுடன் பேசி ஏற்பாடு செய்யுமாறு பாகவதர் தன் மகனிடம் கூறுகிறார்.

சாம்பு சாஸ்திரியிடம் அவர் மனைவி பிரியா கூறியதைக் கூற அவர் அந்த யோசனையை ஏற்க மறுக்கிறார். இப்போதைக்கு வந்தலும் சீக்கிரமே கூட்டுக் குடும்பம் பிரியாவுக்கு அலுத்துவிடும் என்றும், ஆகவே அவள் அப்பா செய்து வைத்த தனிக்குடித்தன ஏற்பாடே ஏற்றது என்றும் அவர் கூறிவிடுகிறார்.

நாதன் தன்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாகவதர் அசோக்கின் ஜாதகத்தை பிரபல ஜோஸ்யரிடம் காட்ட அவர் அதை பார்த்துவிட்டு அசந்து போகிறார்.

ஜாதகம் எல்லாம் அப்படியே பலித்து விடுமா என சம்சயம் கொள்ளும் தன் நண்பரிடம் சோ அவர்கள் சரியானபடி கணிக்கப்பட்ட ஜாதகங்கள் என்றால் நிச்சயம் பலிக்கும் என்கிறார். இதில் நேரமும் சரியான முறையில் கணிக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறி அதை விளக்க கணிதமேதை பாஸ்கராச்சாரியர் தனது மகளின் மாங்கல்யபலம் குறைவாக இருந்ததால், கணித முறைப்படி ஒரு முகூர்த்த நேரத்தை கணித்து அதில் தனது மகளின் திருமணத்தை நடத்துகிறார். இருப்பினும் நேரம் காட்டும் கருவியில் கோளாறு ஏற்பட்டு அவர் மகளுக்கு தவறான நேரத்தில் மணம் நடந்து அவள் விதவையாகிறாள்.

இங்கு சீரியலில் ஜோசியர் தனது முடிவுகளை மேலும் கூறுகிறார். இது ஒரு மகானுடைய ஜாதகம். ஜாதகர் வாக்கு பலம் அதிகம் உள்ளவர். அவர் கூறியது பலிக்கும். லோகாயத வாழ்க்கையான கல்யாணம், காட்சி என ஏதும் இவருக்கில்லை. அவர் இப்போது ஒரு பெரிய தேடலில் இருக்கிறார். பூர்வ ஜன்மங்களில் விடாது புண்ணியம் செய்ததாலேயே அருச்சுனனுக்கு கண்ணனின் விசுவரூப தரிசனம் கிடைத்தது. அது போலவே அசோக்கும் பூர்வ ஜன்மங்களில் புண்ணியங்கள் செய்து அவற்றின் பலம் அதிகமிருப்பதால்தான் அந்த ஜாதகருக்கு இப்பிறப்பில் இவ்வளவு சிறப்புகள். மேலும் இவருக்கு குருவே கிடையாது எனவும் கூறுகிறார்.

அது எப்படி குரு இல்லை எனக் கூறவியலும், பாகவதர் இருக்கிறாரே என சோவின் நண்பர் கேட்க, சோ அவர்கள் குரு என்ப்வர் பற்றி விவரிக்கிறார். ஆச்சாரியர் என்பவர் வேறு உபாத்தியாயர் என்பவர் வேறு என்றெல்லாம் விவரிக்கிறார். நான் எழுதுவதை விட சோ கூறுவதை நேரடியாகக் கேட்பதே அதிகம் பிரயோசனமாக இருக்கும்.

இங்கு சீரியலில் பாகவதரின் திகைப்பு அதிகரிக்கிறது. அப்படியானால் குருகடாட்சம் இவனுக்கு இல்லவே இல்லையா என திகைப்புடன் கேட்க, அசோக்குக்கு குருவே தேவையில்லை, அவன் ஒரு ஸ்வயமாச்சாரியன் என ஜோசியர் விளக்குகிறார்.அசோக்கின் வாழ்க்கையில் இன்னும் பல அமானுஷ்ய விஷயங்கள் நடக்கவிருக்கின்றன. அப்போதுதான் லோகத்துக்கே ஒளி வரப்போகிறது என்றும் கூறுகிறார்.

பகுதி - 37 (24.03.2009):(இந்த எபிசோட் இணையத்தில் ஏற்றப்படவில்லை)
நாதன் வீட்டிற்கு வந்திருக்கும் அவரது சகோதரி உடையாளூர் செல்லம்மா வசுமதியிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். உடையாளூரில் உள்ள குலதெய்வக் கோவிலை வசுமதியும் நாதனும் அலட்சியம் செய்ததால்தான் பிரச்சினைகள் என்றும் அங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளும்படியும் அவள் ஆலோசனை கூறுகிறாள்.

அது என்ன குல தெய்வம், எல்லா தெய்வங்களும் ஒன்றுதானே என சோவின் நண்பர் கேட்க, நாம் குடும்ப டாக்டர் எனக் கூறி ஒரு குறிப்பிட்ட மருத்துவரிடம் போவதுபோலத்தான் இஉதுவும் என சோ விளக்குகிறார். கடைசியில் ஆண்டவன் ஒருவனே என்பதை எல்லோருமே ஒத்துக் கொள்கின்றனர் என்பதிலும் சந்தேகமேயில்லை என்றும் அவர் கூறுகிறார். அதுதான் இந்து மதத்தின் சிறப்பு. இறைவனை அவரவர் மனநிலைக்கேற்ப உருவகப்படுத்தி கொள்கின்றனர். இறைவனும் அவரவர் மனோபாவத்தை ஒரு தாய் தனது குழந்தையின் விளையாட்டை ரசிக்கும் மனோபாவத்தில் அதே ரூபத்திலும் வருகிறான் என்றும் கூறுகிறார்.

இங்கு ஒரு டைவர்ஷன்:
சமீபத்தில் 1977-ல் வெளியான ஆங்கிலப் படம் ஒன்று "O God" என்னும் தலைப்பில் வந்தது. அதில் வரும் கடவுள் ஒரே ரூபத்தில்தான் வருகிறார், ஆனால் அதே படம் “உருவங்கள் மாறலாம்” என்னும் தலைப்பில் வந்த போது கடவுள் சிவாஜி கணேசன், கமல், ரஜினிகாந்த், மனோரமா, ஜெயசங்கர் என பல ரூபங்களில் வருகிறார். என்னைக் கேட்டால் தமிழில்தான் இப்படம் பாந்தமாக இருந்தது.
டைவர்ஷன் முடிந்தது.

நீலகண்டன் வீட்டில் ஃபோன் அடிக்க உமா எடுக்கிறாள். வசுமதி பர்வதத்துடன் பேச வேண்டும் எனக் கூற, உமா தன் அன்னையை கூப்பிட்டு அவளிடம் ஃபோனைத் தருகிறாள். தான் உடையாளூர் போக எண்ணியிருப்பதை கூறி பர்வதத்தையும் தன்னுடன் அழைக்கிறள் வசுமதி. நீலகண்டனை கேட்டுச் சொல்வதாக பர்வதம் கூறிவிடுகிறாள். உமாவும் தன் அன்னையிடம் உடையாளூர் செல்லுமாறு ஆலோசனை தருகிறாள்.

சாம்பு வீட்டுக்கு பிரியாவின் அம்மா வந்து சாம்புவிடம் பிரியாவின் கூட்டுக் குடும்ப எண்ணத்தை பற்றி விவாதிக்கிறாள். தனது கணவருக்கும் இதில் சம்மதம் என்றும் ஆனால் தனக்கு இல்லையென்றும் கூறி தன் தரப்பு வாதங்களை முன்வைக்கிறாள். ஆரம்ப சூரத்தனமாக பிரியா வந்தாலும் சில நாட்களீலேயே அவள் மனம் மாறிவிடும் எனவும் கூறுகிறாள். சாம்புவும் அந்த வாதங்களை ஏற்று பிரியாவின் எண்ணம் நிறைவேறாமல் இருக்க தன்னால் ஆனதைச் செய்வதாக வாக்களிக்கிறார்.

பிரியாவை பார்க்க கிருபாவின் தம்பி சந்துரு வருகிறான். குடும்ப கஷ்டங்களை எடுத்து கூறுகிறான். தனது தந்தை சாம்பு அநியாயத்துக்கு ஆச்சாரம் பார்க்கிறார், சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார் என்றெல்லாம் புலம்புகிறான்.

உடையாளூரில் குல தெய்வ பூஜை முடிந்ததும், கும்பகோணத்தில் அசோக்குக்கு நாடி ஜோசியம் பார்க்கலாம் என தீர்மானிக்கிறார்கள். அசோக் அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என எடுத்த எடுப்பிலேயே கூறிவிடுகிறான். ஆனால் மற்றவர்கள் ஒத்து கொள்ளாததால், பிறகு உங்கள் இஷ்டம் என விட்டு விடுகிறான். அதே சமயம் தனக்கான ஓலைச்சுவடி கிடைக்காது எனவும் கூறுகிறான்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

வால்பையன் said...

எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது