3/30/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் - 39 & 40

பகுதி - 39 (26.03.2009):
இதற்கு முந்தைய பதிவில் நான் குறிப்பிட்டபடி, இப்போதுதான் கதையே சூடுபிடிக்கிறது. கைலாய சீன் போன பகுதியில் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறது. நாரதரை பரமனும் உமையும் ஜாக்கிரதை உணர்வுடனேயே வரவேற்கின்றனர். ஆனாலும் என்ன, கலகம் செய்யாது ஒரு குறிப்பிட்டக் காலம் கழிந்தால் தலை வெடித்துவிடும் என்ற சாபத்தைப் பெற்ற நாரதரிடரமா அது நடக்கும்?

நாரதர் பூலோகத்தில் தான் கண்ட ஒரு விஷயம் பற்றிக் கூறுகிறார்.

“சமீபத்தில் பூவுலகில், பாரத தேசத்தில், தென்னாட்டில் பிராமணர்கள் மகாநாடு நடந்தது. (இங்கு டோண்டு ராகவனின் சிறுகுறிப்பு: இக்கதை சமீபத்தில் எழுபதுகளில் வந்தது. ஆகவே அதில் குறிப்பிட்டப்பட்ட மகாநாடும் எழுபதுகளில்தான் வந்திருக்க வேண்டும். அதாவது சமீபத்தில் எழுபதுகளில் என வைத்து கொள்ளலாம். இக்குறிப்பு வால்பையனின் கவனத்துக்காக). அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றி, கலாசாலைகளில் அவர்களுக்கு தரப்படும் இடங்களின் எண்ணிக்கை பற்றி எல்லாம் அந்த மகாநாட்டில் விவாதிக்கப்பட்டன. இந்த மகாநாடு பிராமணர்களின் ஜாதி வெறியைத்தான் காட்டுகிற்து என்று சிலர் கூறுகிறார்கள். சில தீவிரவாதிகள் அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்றும் சில அதிதீவிரவாதிகள் அவர்கள் ஒழிக்கப்படவேண்டும் என்றும் கூறுகிறார்கள்”.

கைலாயத்தில் எல்லோருமே மௌனம் சாதிக்க, நாரதர் மெதுவாக இது சம்பந்தமாக விஸ்வாமித்திரர் கருத்து கூறாதது ஆச்சரியமாக உள்ளது என அவருக்குக் கொம்பு சீவுகிறார். மேலும் சில சொற்களை இதே பாணியில் கூற விஸ்வாமித்திரர் வாய் திறக்கிறார். இது பற்றி மேலே பேசும் முன்னால் எத்தனை பிராமணர்கள் எங்கே இருக்கிரார்கள் என்பது அடையாள்ம் காணப்படுவது அவசியம் என அவர் அபிப்பிராயப்படுகிறார். வசிஷ்டர் தன் பங்குக்கு, இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன்னால் யார் பிராமணன் என்பதும் தெளிவாக வேண்டும் என கூறுகிறார்.

பிரச்சினைகளுக்கு விடை என்ன என உமையவள் கேட்க, இக்கேள்விகள் கைலாயத்தில் எழுப்பப்பட்டாலும், அவற்றுக்கான விடைகளை பூவுலகில்தான் தேட வேண்டும் எனக் கூறிவிட்டு, மேலும் பேசுகிறார் பரமன்.

“இதற்கான விடைகளைக்காண வசிஷ்டர் பூவுலகில் அவதரிப்பார். அவருக்கு பூணூல் போட்டு பிரும்மோபதேசம் பெறும் வரையில் சாதாரணமாகவே இருப்பார். அதன் பிறகு தனது தேடலைத் துவங்குவார், தான் கண்டறியும் விஷயங்களை மனித சமுதாயத்துக்கு கூறுவார். ஏற்பவர் ஏற்கட்டும், ஏற்காதவர் பற்றிக் கவலையில்லை. இந்த விவாதம் பூவுலகில் பல காலமாக நடந்து வந்து ஒவ்வொருவரும் தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப பதில் கூறி வந்துள்ளனர். ஆகவே நடுநிலைமையிலிருந்து ஒருவர் இந்த விஷயத்தை ஆதியோடந்தமாக கண்டறிவது அவசியம். அதற்கு வசிஷ்டரே லாயக்கானவர். அசோக் உண்மையான பிராமணனைக் கண்டதும்தான் தான் வசிஷ்டன் என்பதை உணர்வான். அப்போது இங்கு கைலாயத்தில் நமது ஆனந்தத் தாண்டவம் நடக்கும். அது வசிஷ்டனாகிய அசோக்கின் காதில் விழும். அவன் உடனேயே கைலாயம் திரும்புவான்”

இதை கூறியதும் கைலாயத்தில் சந்தோஷ அலைகள் பொங்குகின்றன. கலபக மரங்களுக்கிடையே மகரிஷிகள் அமைந்து வேதம் ஓதினார்கள். விநாயகர் உவகை பொங்க, உரக்க வீரிட அந்த ஒலியைக்கேட்ட குகனுடைய மயில், ‘மேகக்கூட்டத்தின் சப்தம்’ என எண்ணி தோகை விரித்து ஆனந்த நடனம் ஆடியது. (மேலே படிக்க, பார்க்க “எங்கே பிராமணன்? அல்லயன்ஸ் பதிப்பகம், ஒன்பதாம் பதிப்பு, பக்கங்கள் 87 - 88).

இங்கு நாதன் வீட்டில் கூட்டு பிரார்த்தனை முடிந்து, பாகவதர் விடை பெற்று செல்கிறார். பிறகு திடீரென ஏதோ ஒன்று ஞாபகத்துக்கு வர, திரும்பவும் நாதன் வீட்டுக்கே வருகிறார். நாதனிடம் அவர் தந்தை பற்றியும், பாட்டனார் பற்றியும் விசாரித்து அவர்கள் பிராமணர்கள் செய்ய வேண்டிய கருமாக்களை சரிவர செய்யாததால் அனர்த்தம் வந்ததெனக்கூறி, அசோக்குக்கு கூடிய சீக்கிரம் பூணல் போட வேண்டும் எனக்கூறுகிறார். நாதனும் வசுமதியும் ஒத்து கொள்கின்றனர்.

இப்போது சீனுக்கு வருகின்றனர் சோவும் நண்பரும். சோ அவரிடம் கலியுகத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை அதன் முந்தைய யுகங்களிலேயே கூறிவிட்டனர் என்று கூறி பல உதாரணங்களை அடுக்குகிறார். “சார், நீங்கள் நிறைய படித்திருக்கிறீர்கள்” என நண்பர் வியக்க, தன்னை மாதிரி அதிகம் பேசுபவர்கள் புத்திசாலிகளாகக் கருதப்படுவார்கள் எனக்கூறி முத்தாய்ப்பு வைக்கிறார்.

பகுதி - 40 (27.03.2009):
அசோக்குக்கு பூணல் போட முடிவானதும் வசுமதி நீலக்ண்டன் மனைவி பர்வதத்துக்கு ஃபோன் செய்து அவாளாத்து சாஸ்திரிகளிடம் இது பற்றி கூறும்படி கேட்டுக் கொள்கிறாள்.

நீலகண்டன் வீட்டில் அசோக்கின் பூணல் விஷயம் பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. சில எளிய உதாரணங்களால் பர்வதம் காயத்ரி மந்திரம் கற்றுத்தரும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பதைத் தன் கணவருக்கு விளக்குகிறாள்.

பிரியா கிருபா வீட்டில் பிரியா தன் கணவனிடம் அவனுக்கு வேலையில் பிரமோஷன் கிடைக்க சுதர்சன ஹோமம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு ஆலோசனை கூறுகிறாள். தனது தந்தையும் முக்கியமானத் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னால் சுதர்சன மந்திரம் கூறுவார் என்றும் கூறுகிறாள்.

இது பற்றி சோவின் நண்பர் அவரிடம் கேட்க, சோ அவர்கள் எல்லா காரியத்துக்குமே ஆண்டவன் அருள் தேவை என்கிறார். ஒரு பெரிய மரத்தின் கீழே ஒரு பக்கத்தில் தம்பதியர் படுத்து இளைப்பாற, மறு பக்கத்தில் இவர்களது இருப்பை அறியாத வேடன் படுத்துறங்குகிறான். மரத்தின் கிளைகளில் எப்போதோ யாரோ விட்ட அம்பொன்று காற்ரின் அசைவால் கீழே விழுந்து தம்பதியரில் மனைவியின் உயிரைக் குடிக்கிறது. வேடன் மேல் பழி விழுந்து வழக்கு மன்னனிடம் வருகிறது. இதில் செய்வதறியாத மன்னன் சோமசுந்தரக் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய கோவிலுக்கு செல்கிறான். அவரது அருளால் இரு யமகிங்கரர்கள் பேசுவதை அவன் கேட்க இயலுகிறது. அப்போது ஒரு உயிரை எடுக்கும் விதத்தைப் பற்றிப் பேச, அப்போது மரத்தடியில் அந்த பெண்மணி அம்பால் எவ்வாறு உயிரிழந்தாள் என்பதும் வெளியில் வருகிறது. மன்னனும் தெளிவு பெற முடிந்தது.

இது ஒரு extreme கேஸ் என்றாலும், இறைவன் அருள் இருந்தால்தான் செய்யும் காரியமும் சித்தியடையும் என்பதையே இது விளக்குகிறது என சோ கூறுகிறார்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஐயையோ இந்த சீரியல் ரெண்டு வருசம் வந்தா இதே மாதிரி முழுக் கதையும் எழுதிகிட்டிருப்பீங்களா :)

dondu(#11168674346665545885) said...

@ஜ்யோவ்ராம் சுந்தர்
ஆமாம், அப்படித்தான் உத்தேசம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அப்படி போடுங்க அறுவாளை

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது