3/13/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் 26 மற்றும் 27

பகுதி - 26 (09.03.2009):
தனது அடிதடி வேலையை முடித்துவிட்டு சிங்காரம் வையாபுரியிடம் திரும்பச் செல்கிறான். வையாபுரியும் அவனுக்கு பணம் கிடைக்க ஏற்பாடு செய்கிறான். இங்கே நாதன் வீட்டில் அவர் அசோக்கை இந்த சம்பவம் நடந்தது பற்றி அவன் பேசக்கூடாது என தடுக்கிறார். வையாபுரியிடம் அவர் சேரலாகாது என அசோக் ஆலோசனை கூற, அதெல்லாம் வேறு விஷயம் என நாதன் கூறுகிறார். சில விஷயங்களை தருமத்தின்படி செய்யலாம், பல காரியங்களை அடாவடியால்தான் சாதிக்க முடியும், அதற்கு வையாபுரி போன்றவர்கள் துணை தேவை என நாதன் கூறுகிறார். நாதன் அதர்மத்துக்குள் தர்மம் தேடுவதாக அசோக் கூறுகிறான்.

சோவிடம் அவர் நண்பர் கேட்கிறார், அதென்ன சார் தர்மத்தில் அதர்மம்னு குழப்பறேள் என்று. சோ கூறுகிறார், அசோக்கை பொருத்தவரை தர்மம் என்பது சட்டம், நியாயம், நீதி, மொராலிட்டி, righteous conduct ஆகியவற்றைக் குறிக்கும். நாதனைப் பொருத்தவரை வையாபுரி அவர் நண்பர்,அவருக்கு கெடுதல் செய்யலாகாது, அதிலேயே அவரது வியாபார தர்மமும் அடங்கியுள்ளது. மகாபாரதத்தில் கர்ணனும் அதே மாதிரி தர்ம சங்கடத்தில்தான் உள்ளான். துரியன் எவ்வளவு கொடியவனாக இருப்பினும் அவன் தனது நண்பன், எல்லோரும் தன்னை ஒதுக்கியபோது தன்னை நண்பனாக ஏற்று கொண்டவன். குந்தி தனது தாயாக இருப்பினும் தேரோட்டியின் மனைவியையே அவன் தாயாக காண்கிறான். ஆக எந்த இடத்திலும் தர்மமோ அதர்மமோ வெளிப்படையாகத் தெரியாது. என்ன செய்ய வேண்டுமென்றால், சான்றோர்கள் எதை தர்மம் எனக் கூறுகிறார்களோ அதன்படியே நடப்பதுதான் நல்லது. கூடவே ஸ்வதர்மம் பற்றியும் சோ கூறினார். அதை வைத்துப் பார்த்தால், கும்பகருணன் ராவணன் பக்கம் இருந்தது அவன் தருமம், வீடணன் எதிர்த்து நின்றதும் அவனைப் பொருத்தவரை சரியேதான்.

காலேஜில் அசோக்கை சக மாணவர்கள் கலாய்த்து அவனை வம்பில் மாட்டி விடுகின்றனர். பகவத் கீதை, குரான், பைபிள் ஆகியவையே புத்தகங்கள், மற்றவை குப்பை எனக் கூறிய அசோக்கை நைச்சியமாகப் பேசி ஒரு பாடப் புத்தகத்தை எரிக்க வைக்கின்றனர். அதனால் கல்லூரி முதல்வர் அசோக்கை டிஸ்மிஸ் செய்கிறார். அசோக் அதை நாதனிடம் கூறுகிறான்.

பகுதி - 27 (10.03.2009):
அசோக்கின் காலேஜ் பிரின்சிபாலை நாதன் வந்து பார்க்கிறார். அசோக் செய்தது தவறுதான் என்றாலும் அவனைவிட பெரிய தவறுகள் செய்தவர்களையெல்லாம் மன்னித்துவிடும்போது இவனை மட்டும் காலேஜை விட்டு ஒரேயடியாக நீக்குவது கருணையில்லாத செயல் என அவர் சீற, பிரின்சிபாலோ அமைதியாக தான் அசோக்கைக் கருணையின் பேரிலேயே டிஸ்மிஸ் செய்ததாகக் கூறுகிறார். ஏனெனில் அசோக் தினமும் மற்ற மாணவர்களால் சீண்டப்படுகிறான். ஆனால் ஒரு முறைகூட அசோக் தன்னிடம் வந்து புகார் செய்யவில்லை என்கிறார் அவர். மேலும் கூறுகிறார், அசோக் ஒரு அசாதாரண மனிதன். இந்த காலேஜோ அல்லது வெறெந்த கல்லூரியோ அவனுக்கு ஒத்து வராது. அவன் வீட்டிலிருந்தே படிக்கலாம் எனக் கூறுகிறார்.

இப்போது சீனில் வருகின்றனர் சோவும் நண்பரும். அசோக் என்ன ஜடமா எனக் கேட்கிறார் நண்பர். அவன் ஸ்திதப் பிரக்ஞன் என்கிறார் சோ. அதாவது ஒருமித்து சிந்திப்பவன் என்கிறார். இது சம்பந்தமாக ஜடபரதர் கதையைக் கூறுகிறார்.

மீண்டும் பிரின்சிபால். வாராது வந்த மாணிக்கம் அசோக். அவன் படும்பாடு சகிக்காது மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவனை டிஸ்மிஸ் செய்ததாக அவர் கூறுகிறார். நாதன் விடை பெற்று செல்கிறார். பின்னணியில் மெதுவான வேகத்தில் பாடல் ஒலிக்கிறது,

“நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ (நல்லதோர்)

சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோபட்ட - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ (நல்லதோர்)

விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ (2)(நல்லதோர்)

நாதன் வீட்டுக்கு வந்து வசுமதியிடம் பேசுகிறார். அசோக் கல்லூரியில் பட்ட கஷ்டங்களை பற்றி குறிப்பிடும் அவர் அவற்றை விவரிக்க மறுக்கிறார், ஏனெனில் வசுமதியால் அதைத் தாங்க இயலாது என்பதால். மற்ற மாணவன் யாருக்கேனும் இம்மாதிரி தொந்தரவுகள் வந்திருந்தால் தற்கொலை வரை விஷயம் விபரீதமாகியிருக்கும் என்கிறார். நமக்கெல்லாம் வேகம் மட்டும்தான் இருக்கிறது, ஆனால் அசோக்குக்கோ விவேகம் இருக்கிறது என்கிறார் நாதன். இத்தனை இன்று பேசும் நாதன் தானே அடுத்த நாள் மாறி முழுக்க லௌகீக வாழ்க்கைக்கே திரும்பி விடுவார் என்பதை உணர்ந்தே அவர் பேசுகிறார். எது எப்படியானாலும் அசோக்குக்கு இனி காலேஜ் கிடையாது, வீட்டிலிருந்தே படிக்கட்டும் என கூறுகிறார் அவர். அவன் ஞானத்தைத் தேடுகிறான் என்றும் உணர்த்துகிறார்.

மீண்டும் சோவும் நண்பரும் வருகின்றனர். “அதென்ன சார், எல்லோரும் ஞானத்தைத்தான் தேட வேண்டுமா” என நண்பர் வினவ, அப்படியில்லை என மறுக்கிறார் சோ அவர்கள். கல்லூரி படிப்பு பற்றியும் அவர் பேசுகிறார். பூகோளம் படித்துவிட்டு சட்டக் கல்லூரியில் சேருகிறார்கள். சரித்திரம் படித்துவிட்டு வங்கி வேலைக்கு செல்கின்றனர். (“இப்ப நீ இஞ்சினீயரிங்குக்கு படிச்சுட்டு மொழிபெயர்ப்பு செய்யறது போலவா” என்று கேட்கிறான் முரளி மனோகர். அப்படியெல்லாம் கூறிவிட இயலாது, ஏனெனில் நான் தொழில் நுட்ப விஷயங்களை மொழிபெயர்க்கிறேன் என்பதே என் பதில்).

தற்காலக் கல்வி முறை பற்றி பாரதியார் கூறியதையும் நினைவுபடுத்துகிறார் சோ:
"கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும் உம்பர் வானத்து மீனையும் கோளையும் ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும் சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பாரளித்ததும் தர்மம் வளர்த்ததும் பேரருட் சுடர்வாள் கொண்டு அசோகனார் பிழைபடாது புவித்தலம் காத்தலும் அன்ன யாவும் உணர்ந்திலர் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்'

நாட்டின் பெருமைகள் பற்றியெல்லாம் கல்வி போதிப்பதில்லை என்ற ஆதங்கமும் இங்கு வெளிப்படுகிறது. ஆங்கிலக் கல்வி வெறும் பேடிக் கல்வி. ஆனால் அசோக்குக்கு தேவைப்படுவது ஞானக் கல்வியே.

இந்த இடத்தில் நாவலிலிருந்து மாறியிருக்கிறார் சோ அவர்கள். அதில் அசோக் காலேஜை விட்டது அவனாகவே செய்த முடிவு, அதுவும் கதையின் இந்தக் கட்டத்தில் வராது பின்னால் வருகிறது. ஆனால் இந்த மாறுதலும் நல்லதாகவே படுகிறது. நாவலில் வெறுமனே தொடப்பட்டு செல்லும் பாத்திர குணாதிசயங்கள் இங்கு விரிவாகவே அலசப்படுகின்றன. ஒரு பின்னல் வலை இங்கு திறமையாகப் பின்னப்படுகிறது.

சீரியலுக்கு நடுநடுவில் வரும் சோவும் நண்பர்களும் பேசுவது சீரியலுக்கு சுவை ஊட்டுகிறது. எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

Anonymous said...

Are you not watching "Thirumbi Parkiren" by Cho in Jayatv every night at 10.00pm ?

tonight is the last episode.

I thought you will be posting about these episodes of Cho also from 9-March to 13-March.

Unknown said...

Dondu Sir,

Can you please let me know about the "Engey Brahmanan" book availability ?. I have written to Thuglak already, but no responses yet.

dondu(#11168674346665545885) said...

@ஹரீஷ்
நீங்கள் மயிலையில் கபாலீஸ்வரர் கோவில் மேற்கு குளத்தங்கரைத் தெருவில் உள்ள அலையன்ஸ் பப்ளிஷரில் சோவின் அனைத்து புத்தகங்களையும் பெறலாம்.

சென்னையில் லேண்ட் மார்க், ஹிக்கின்பாதம்ஸ் ஆகிய கடைகளிலும் பெறலாம்.

ஈ பே யிலும் கிடைக்கக் கூடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

இந்த மொக்கை நமக்கு ஆவாது.
பின்னூட்டம் எதாவது சுவாரிஷ்யமா வருதான்னு பார்ப்போம்.

Anonymous said...

normally in thuklak ,advertisements are not coming, what is the reason?
is it due to poor response from business people or cho's policy?
what is the circulation at present?
has it increased due to serial in jeya tv supported by your writeups about the serial ?
cho has asked algiri to come up leaving all, at the wedding function of poongulali? why?
whether congress and admk will form alliance in the coming election?
can jeyatv attract viewers in the midst of 10 channels attack of sun and kalikar tvs ?

ramani

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது