3/28/2009

மாண்புமிகு நந்திவர்மன்

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்னும் தலைப்பில் புதுமைப்பித்தான் ஒரு கதை எழுதியுள்ளார்.

“மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், 'பிராட்வே'யும் 'எஸ்பிளனேடு'ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்” என ஆரம்பிக்கும் அக்கதையை முழுதும் படிக்க இங்கே செல்லவும். நான் அக்கதையை இங்கு குறிக்கும் நோக்கத்தை பின்னால் கூறுகிறேன்.

இப்போது நான் நம்ம பதிவர் டி.வி ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதி முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த மாண்புமிகு நந்திவர்மன் என்னும் நாடகத்தைப் பார்த்துவிட்டு வந்தேன்.அதை பார்க்கும்போது மேலே நான் குறிப்பிட்ட புதுமைப் பித்தனின் கதைதான் நினைவுக்கு வந்தது. அது மட்டுமா வந்தது? சோ அவர்கள் எழுதிய “சம்பவாமி யுகே யுகே” என்ற நாடகமும் நினைவுக்கு வந்தது. சமீபத்தில் எழுபதுகளில் தேங்காய் சீனுவாசன் நடித்த “கலியுகக் கண்ணன்” திரைப்படமும்தான்.

ஏன் அவ்வாறு வரவேண்டும்? ஏனெனில் எல்லாவற்றிலும் கடவுளே பூவுலகுக்கு வந்து சிறிது காலம் மனிதர்களுடன் தங்குகிறார்/பழகுகிறார்/அவ்வப்போது வந்து போகிறார். இந்த கான்சப்டை ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு மாதிரியாக கையாண்டுள்ளார்கள். ஓரிரு தினங்களுக்கு முன்னால் பதிவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் எனக்கு ஃபோன் செய்து தனது சௌம்யா தியேட்டர்ஸ் குழுவினர் இந்த நாடகத்தை வாணிமகாலில் 28.03.2009 மாலை திநகர் வாணிமகாலில் போடப்போவதாகக் கூறி எனக்கும் அழைப்பு விடுத்தார். முன்னமேயே இவரது “என்று தணியும்” என்னும் நாடகத்தை பார்த்துள்ளேன். அப்போது அவர் அமெரிக்காவில் இருந்தார். இம்முறை அவரும் இருந்து நாடகத்தில் முக்கிய பாத்திரத்தையும் ஏற்று நடித்துள்ளார்.

ஏற்கனவேயே சொன்னபடி இதில் சிவபெருமான் பூவுலகுக்கு தனது பக்தர் சத்தியா என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்கி அரசியல்வாதிகளை திருத்துவதற்காக வருகிறார். வருகிறவர் தானே அரசியல் வலையில் சிக்கி, முதல்வராக பதவியேற்று, இல்லாத ஊழல்கள் எல்லாம் செய்து பதவியிழக்கிறார். கடவுளாலும் அரசியல் என்னும் சாக்கடையை சரி செய்தல் இயலாது என்ற கான்சப்டை முன்வைக்கிறது இந்த நாடகம்.

கரூர் ரங்கராஜன் சத்தியாவாகவும், டி.வி.ராதாகிருஷ்ணன் சிவபெருமானாகவும், SBI முரளி எம்.எல்.ஏ. பூபதியாகவும், சக்தி சத்தியாவின் மகன் தமிழாகவும், ராஜேந்திரன் அமாவாசையாகவும், வாசுதேவன் பொதுமக்களாகவும், P.R.S. பத்திரிகை நிருபராகவும் வருகின்றனர்.

மேடைக்கு பின்னால் செயல்பட்டவர்கள்:
ஒப்பனை -- குமார்,
அரங்கவமைப்பு -- சைதை குமார்,
ஒலி -- வாணிமஹால்
ஒளி மற்றும் இசைக்கலவை: கிச்சா,
தயாரிப்பு நிர்வாகம்: P.R. சீனுவாசன்
எண்ணம், உரையாடல், இயக்கம் -- டி.வி. ராதாகிருஷ்ணன்.

தேவையின்றி இழுக்கடிக்காமல் நாடகத்தை விறுவிறென கொண்டு சென்ற ராதாகிருஷ்ணன் பாராட்டுக்குரியவர். என்ன, நாடகம் ஒரு கையறு நிலையில் முடிந்தது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அதேசமயம் எவ்வாறு யோசித்து பார்த்தாலும் கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் வேறு எவ்விதமாக நாடகத்தை முடித்திருக்க இயலும் என்பதையும் கற்பனை செய்ய முடியவில்லை என்பதே நிஜம். இதே மனநிலை எனக்கு சோ அவர்களின் “சம்பவாமி யுகே யுகே” நாடகத்தைப் பார்த்தபோதும் ஏற்பட்டது.

நாடகத்தின் பெரும்பகுதியில் ஒரு கேரக்டர் ஒன்றுமே பேசாது வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டது. கடைசியில்தான் அது பொதுமக்களை பிரதிபலிக்கும் பாத்திரம் என விளங்கியது. ஆர்.கே. லட்ச்மணின் கார்ட்டூனில் வரும் common man போல என வைத்து கொள்ளலாம். மேலும் பதவியில் இருக்கும்வரை சிவபெருமானே அவரைப் பார்க்கவில்லை, பதவியிழந்ததும்தான் அவர் கண்ணுக்கு தென்பட்டார் என்பதும் சுவாரசியமாக இருந்தது.

நாடகம் முடிந்ததும் கிரீன் ரூமுக்கு சென்று ராதாகிருஷ்ணனுடனும் கரூர் ரங்கராஜனிடமும் பேசினேன். எனக்கு தெரிந்து அமெச்சூர் நாடகங்கள் மிகவும் குறைந்து விட்டது. சௌம்யா குழுவினர், ஒய்.ஜி. மகேந்திரன், எஸ்.வி. சேகர் மற்றும் கிரேசி மோகன் ஆகியோர் மட்டுமே நினைவுக்கு வருகின்றனர். அரங்கம் கிட்டத்தட்ட காலியாகவே இருந்தது. இதே நாடகம் அதன் பஞ்ச் வரிகளுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வரிக்குவரி அப்ளாஸ் வாங்கியிருக்கும்.

நான் ஏற்கனவே கூறியபடி, இவரது “என்று தணியும்” என்னும் நாடகத்தை பார்த்தபோது அவர் அமெரிக்காவில் இருந்தார். (இந்த நாடகம் “அன்னியன்” மற்றும் “கௌரவம்” கதைகளை நினைவுபடுத்தியது). சென்னையில் அவர் அச்சமயம் இருந்திருந்தால் கரூர் தங்கராஜின் உறவினராக வந்து காமெடி டயலாக் சொல்லியிருப்பார் எனத் தோன்றுகிறது (கௌரவம் திரைப்படத்தில் நீலு ஏற்ற பாத்திரம்). ஏனெனில் இப்போதைய நாடகத்தில் சிவபெருமானே சற்று காமெடி டயலாக் பேசி புன்முறுவலை வரவழைத்தார். ராதாகிருஷ்ணன் அவர்கள்தான் எனது அனுமானம் சரியா எனக் கூற வேண்டும்.

மற்ற ஊடகங்களிருந்து வரும் போட்டிகளால் தமிழ் நாடகக் கலைக்கு இப்போது பின்னடைவுதான் என எனக்கு தோன்றுகிறது. எப்படி அவர்களுக்கு கட்டுப்படியாகிறது என்று கேட்டேன். தாங்கள் அமெச்சூர் குழுவென்றும், நடிகர்களுக்கு போக்குவரத்துக்கு மட்டுமே பணம் தரப்படும் என்றும், வெறுமனே ஆர்கெஸ்ட்ரா, லைட்டிங் ஆகிய விஷயங்களுக்கும் மட்டுமே பணம் தருவதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார். கேட் கலெக்சன் என இழுத்ததற்கு அது ஒரு சபா ஏற்பாடு செய்த நாடகம் என்றும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகை தந்து விடுவார்கள் எனவும் கூறப்பட்டது. கையைக் கடிக்காமல் போகிறதா எனக் கேட்டதற்கு ஏதோ போகிறது என பதில் கிடைத்தது. ஆனால் அவ்விருவருடைய ஆர்வமே அவர்களது செயல்பாட்டுக்கு காரணம் என்பது புரிந்தது. அதே சமயம் தொழில்முறை நடிகர்கள் ஏன் குறைந்து போனார்கள் என்பதும் புலப்பட்டது.

அவ்விருவருக்கும் வாழ்த்து கூறிவிட்டு புறப்பட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி டோண்டு சார்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது