5/17/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் - 72 & 73

பகுதி - 72 (14.05.2009):
நாதன் விட்டில் சமையற்கார மாமி கோமதி அசோக்குக்கு தெரியாமல் நாதனுக்கும் வசுமதிக்கும் ஒரு யோசனை செல்கிறாள். ஆனால் என்னவென்பது பார்வையாளர்களுக்கு முதலில் சொல்லப்படுவதில்லை. கோமதியின் ஆலோசனை நாதனுக்கு பிடித்திருக்கிறது, ஆனால் வசுமதிக்கு ரசிக்கவில்லை. நாதன் தான் இப்போதே புறப்பட்டு அந்த வீட்டுக்கு செல்ல ஆயத்தம் செய்ய, வசுமதி அவர் தன் ஸ்டேடஸ் பார்க்க வேண்டும் எனக்கூறி, கடிதமாக அவரது எண்ணத்தைக் கூறி கோமதி மாமி மூலமாக அந்த வீட்டில் கொண்டு போய் கொடுக்கும்படி செய்கிறாள். பிறகு மாமி போய் கடிதம் தரும்போதுதான் ‘அந்த’ வீடு நீலகண்டனின் வீடு என நமக்கு காட்டப்படுகிறது.

நீலகண்டன் கடித்தத்தை படித்து விட்டு பர்வதத்துடன் பேசுகிறார். பிறகு நாதனது கோரிக்கையை தட்ட முடியாது எனக் கூறுகிறார். அதன்படி நாதன் வீட்டுக்கு உமா செல்கிறாள். நாதன் அவளிடம் அசோக்குக்கு உதவி செய்ய தான் ஏற்பாடு செய்த மனோதத்துவ நிபுணர்களால் பலன் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறுகிறார். உடல் சம்பந்தமான வேறு பிரச்சினை என்றால் அல்லோபதி, ஆயுர்வேதம், யுனானி போன்ற வைத்திய முறைகள் உண்டு எனக்கூறும் அவர் இங்குள்ள மனப்பிரச்சினைக்கு அவை சரிபடாது என்கிறார்.

இப்போது திரையில் வரும் சோவின் நண்பர் சோவிடம் ஆயுர்வேதம் என்பது சாதாரண நாட்டு வைத்தியம்தானே எனக் கேட்க, சோ ஆயுர்வேதத்தின் ஆரம்பம், அதன் அபிவிருத்தி பற்றி விஸ்தாரமாக பேசுகிறார். பழங்காலத்திலேயே அறுவை சிகிச்சைகள் இம்மருத்துவ முறையில் நடைபெற்றதையும் அவர் கூறுகிறார். அதே சமயம் மிகப் பழமையான இக்கலையில் காலப் போக்கில் சில விஷயங்கள் தொலைந்து போயிருக்கும் என்பதையும் ஒத்துக் கொள்கிறார்.

மீண்டும் காட்சி நாதன், உமா, வசுமதியிடம் செல்கிறது. அசோக் ஆன்மீகத்திலெயே ஆழ்ந்து கிடக்கிறான், ஆகவே அவனை லௌகீக வாழ்க்கைக்கு அழைத்து வரவேண்டும் என்பதுதான் இப்போதைய தேவை. உமாவிடம் அவனுக்கு ஒரு பரிவு இருப்பதை தான் ஏற்கனவே பார்த்ததாகவும், அதனால்தான் அவன் அவள் சொல்லை ஏற்று, மனோதத்துவ நிபுணர்களிடம் வரவே சம்மதித்ததாகவும் கூறிய நாதன் இம்முறையும் அவள்தான் அசோக்குடன் பேசி, அவன் மனதை மாற்றி, சாதாரண வாழ்க்கைக்கு திரும்புமாறு செய்ய வேண்டும் என உமாவை கேட்டு கொள்கிறார். சில நொடிகள் தீவிரமாக யோசித்த உமா அதற்கு ஒத்து கொள்கிறாள். நாதன், வசுமதி ஆகிய இருவருமே மகிழ்கின்றனர். “இதற்காக நீ என்ன கேட்டாலும் நான் மனப்பூர்வமாகவே தருகிறேன்” என நாதன் கூறுகிறார். “நான் உங்கள் பிள்ளை அசோக்கை மீட்டுத் தருவேன். அதற்கு பரிசாகவே அசோக்கையே எனக்குத் தருவீர்களா” என உமா சீரியசாகவே கேட்க, வசுமதியின் சிரித்தமுகம் உடனேயே விளக்கு அணைவது போல அணைகிறது. நாதனோ “இதைப் போய் தனியாக கேட்கக் வேண்டுமா, எனக்கு பூரண சம்மதம். உன்னைவிட அசோக்குக்கு நல்ல மனைவி வேறு யாரும் கிடைக்கவியலாது” என்று கூற, அப்பெண்ணும் இருவருக்கும் நன்றிகூறிவிட்டு நாணத்துடன் அங்கிருந்து ஓடுகிறாள்.

இங்கு வசுமதி நாதனுடன் பிலுபிலுவென்று சண்டை போடுகிறாள். “அதெப்படி என்னைக் கேட்காமல் நீங்கள் சம்மதம் தரப்போயிற்று” என கோபிக்கிறாள். நாதனோ அவளிடம் ஒருவரும் எதிர்ப்பார்ப்பு ஏதும் இன்றி காரியம் செய்து தரமாட்டார்கள் எனவும், உமாவை தாங்களே அசோக்கிடம பழகச் சொல்லியிருப்பதாகவும், அவ்வாறு அவள் பழகும் போது அவள் பெயர் கெடாதா எனக் கேட்பதை வசுமதி ஒத்து கொள்ள மறுக்கிறாள். அசோக் உமா திருமணம் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறாள். ஏன் என கேட்டதற்கு, போயும் போயும் அந்த பர்வதம்தான் தனக்கு சம்பந்தியாக வரவேண்டுமா என எகிறுகிறாள். அசோக் குணமாவது முக்கியமா அல்லது ஸ்டேட்டஸ் முக்கியமா என்ற கேள்விக்கு இரண்டும்தான் முக்கியம், ஆனால் இந்த உமாவால் இடப்பட்ட ஷரத்துகளுக்கு ஏற்ப அவன் குணமாவதை விட அவன் அப்படியே இருப்பதே மேல் என்றும் வசுமதி திட்டவட்டமாகக் கூறுகிறாள். நாதன் பொறுமை இழந்து அவளுக்கேற்ற ஸ்டேட்டஸ் உள்ள குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை இவள் தேர்வு செய்து அப்பென்ணை விட்டு அசோக்கை மீட்டுக் கொள்ள இயலுமா என கேட்டு அவள் வாயை அடைக்கிறார். வசுமதியின் பொருமல் என்னவோ நிற்பதாயில்லை.

நீலகண்டன் வீட்டில் உமா தன் அன்னை பர்வதத்திடம் நடந்ததைக் கூறி அசோக்கையே தனது பரிசாகக் கேட்டதாக சொல்ல, அவள் அன்னை தன் பங்குக்கு எகிறுகிறாள். இந்த வசுமதி பழகுவதற்கு கடுமையானவள் என தனது அச்சதைத் தெரிவிக்கிறாள். அதற்குள் நாதன் மூலமாக தகவல் அறிந்த நீலகண்டன் அரக்கப்பரக்க வீட்டுக்கு ஓடி வருகிறார். தன் பெற்றோரிடம் தான் விரும்பியதைக் கேட்டதாகவும், நாதனும் ஒத்துக் கொண்டதாகவும் கூறிய உமா, தனக்கு எப்படியும் திருமணம் செய்து வைக்கத்தான் போகிறீர்கள், அது ஏன் அசோக்காக இருக்கக் கூடாது என கேட்டுவிட்டு அப்பால் செல்கிறாள். நீலகண்டனிடம் பர்வதம் இந்த சம்பந்தத்தை எப்படியும் தடுக்க வேண்டும் எனக் கூற, அவரோ என்ன நடக்கிறதென்று பார்ப்போம், ஒவ்வொன்றாகத்ததான் விஷயங்களை கையாள முடியும் என்கிறார்.

கிரியின் வீட்டில் அவன் தன் அன்னையுடன் சமையலறையில் உதவியாக இருக்க, அவன் தாத்தா தன் மாப்பிள்ளை சிகாமணியிடம் இது பற்றி கேட்கிறார். அதற்கு பதிலாக ஜீவனுக்கு பிரதானமே உணவு என்று கூறும் ஒரு வடமொழி சுலோகத்தை சிகாமணி கூறுகிறார். அவரது மாமனாரோ “அதனால்தான் இதை வலியுறுத்தும் இந்து மதத்தை நேரு அவர்கள் சமையலறை மதம் என கூறுகிறாரோ என கேட்கிறார். அதற்கு சிகாமணி “தூய உணவில் ஆரம்பித்து, சித்தம் சுத்தி செய்து மோட்சம் அடை” என்னும் பொருளில் இன்னொரு வடமொழி சுலோகம் கூறுகிறார்.

அப்போ எல்லாமே சாப்பாடுதானா என சோவின் நண்பர் கேட்கிறார். சோ அவர்கள் சாத்வீக குணம், ரஜோ குணம், தமோ குணம் என்னும் மூன்று வகை குணங்களை கொண்ட மனித்ர்களின் அக்குணங்கள் ஒவ்வொன்றுக்குமே பிரத்தியேக உணவுகள் உண்டு என கூறி விளக்குகிறர்.

பகுதி - 73 (15.05.2007):
சிகாமணி, அவர் மாமனாரின் சம்பாஷணை தொடர்கிறது. அவர் மாமனார் ஆச்சரியப்பட்டு, “நீங்கள் தமிழ் பேராசியர்னுதானே நினைத்து கொண்டிருந்தேன்” என கூற, சிகாமணியோ “தமிழ் நான் உள்வாங்கும் மூச்சு, வடமொழி நான் வெளியிடும் மூச்சு என்கிறார்”. பிறகு ஐம்பது வயதுக்கு மேல் ஓர் ஆண் திருமணம் செய்யலாகாது என சாஸ்திரம் சொல்வதாக சிகாமணி கூறி அதற்கான வடமொழி சுலோகத்தை கூறுகிறார். ஐம்பது வயதுக்கு மேல் மனைவி இறந்தால் சமையல் செய்ய ஒருத்தி வேண்டும் என்பதாலேயே ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்வதை தடுக்க வேண்டும் என்ற நோக்கம்தான் இந்த விதி என்றும் கூறுகிறார். “ஒரு பிராமணன் தோற்றான் ஓய்” என மாமனார் மகிழ்ச்சியுடன் கூவ, “உண்மையான பிராமணன் எப்போதுமே தோற்க மாட்டான்” என கம்பீரமாக சிகாமணி பதில் உரைக்கிறார். உள்ளிருந்து கிரி தன் பங்குக்கு “அப்பாவுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டு, என்ன வெளியில் பார்த்தால் தெரியாது என்கிறான். மாமனார் தன் பெண்ணிடம், “ஏம்மா ஒரு பாதி ப்ராமணனை பிள்ளையாய் அடைஞ்சேனு சொன்ன நீ, ஒரு முழு பிராமணனை கணவனா அடைஞ்சதை சொல்லவேயில்லையே” என நெகிழ்ச்சியுடன் மனப்பூர்வமாக கேட்க, பெண்ணும் தன் கணவன் தன் தந்தையால் கௌரவிக்கப்படுவதை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்குகிறாள்.

“என் மேல் இத்தனை மதிப்பு வைத்திருக்கிறீர்கள். ஆனால் திருமணம் என வரும்போது உங்கள் சாதியினர் கிரிக்கு பெண் தர மறுக்கிறார்கள்” என்கிறார். ஜாதி அபிமானம் என்பதெல்லாம் காலத்துக்கு பொருத்தமானது அல்ல என்பதை உணர தனக்கே இவ்வளவு ஆண்டுகாலம் பிடித்தது என மாமனார் வருத்தத்துடன் கூறுகிறார்.

வேம்பு சாஸ்திரிகள் மனப்பூர்வமாக சம்மதித்தாலும் அவர் மனைவி முகத்தாலேயே தன் எதிர்ப்பை காட்டியதாலேயே தான் இந்த திருமணத்தை நிறுத்தியதாகவும் சிகாமணி கூறுகிறார். மாமனாரோ அவர் சற்றே அவசரப்பட்டு விட்டதாக கூற, சிகாமணி தான் ஒரு வேளை வேம்பு வீட்டிற்கு சென்று அம்மாதிரி பேசாதிருந்தால் கல்யாணம் நடந்திருக்கும், அவர்களும் புரிந்திருப்பார்கள் என்றுதானே அவர் சொல்ல வருகிறார் என கேட்க, மாமனார், “அது மட்டுமல்ல ஜயந்தியே சிகாமணியை பற்றி நல்லவிதமாக தன் அன்னையிடம் கூறியிருப்பாள்” என அங்கலாய்க்கிறார். “நீங்கதான் ஆத்துக்கு பெரியவரா வந்துட்டீங்களே அப்பா. நீங்க வேம்புவாத்துக்கு போய் சுப்பு மாமியின் ம்னதை மாற்றுங்களேன்” என கிரியின் அன்னை சொல்ல, கிழவர் உடனே ஒத்து கொள்கிறார்.

நாதன் வீட்டுக்கு நீலகண்டன் கோபத்துடன் வந்து கோமதி மாமியுடன் மாங்கு மாங்கென்று சண்டை போடுகிறார். தன் மகள் உமாவின் பெயரை யாரைக் கேட்டு அவள் நாதனுக்கு சஜஸ்ட் செய்தார் என சத்தம் போடும் அவர் இப்போது உமா அசோக்கைத்தான் திருமணம் செய்யப்போவதாக கூறுவதையும் கூறுகிறார். தனக்கும் பர்வதத்துக்கும் இந்த சம்பந்தத்தில் இஷ்டமே இல்லை என்றும் கூறுகிறார். கோமதி உடனே “வசு மாமிக்கும் இதில் இஷ்டமில்லை” என்று கூற, அதனால் ஒரு பலனும் இல்லை, ஏனெனில் அசோக் உமாவை மணக்க ஆசைவைத்து தன் தந்தையிடம் கூறி, நாதனும் தங்களை பெண்கேட்டால் தங்களால் மறுக்க இயலாது என சீறுகிறார்.

இப்போது கோமதிமாமி வசுமதியிடம் பேச்சு வாங்குகிறாள். “ஏன் உமாவுக்கு என்ன குறைச்சல்” என கோமதி மாமி கேட்க, “போயும் போயும் அந்த பர்வதம்தான் தனக்கு சம்பந்தியாக வரவேண்டுமா” என எகிறுகிறாள்.

உமா உள்ளே இப்போது வந்து “அசோக் எங்கே” என கேட்க, வசுமதி அவன் வீட்டில் இல்லையென்றும், பாகவதரை பார்க்க கோவிலுக்கு போயிருப்பதாகவும் பொய் கூறி வாயை மூடும் முன்னமே அசோக் கீழே வந்து வசுமதியின் வாயை அடைக்கிறான். வேறு வழியின்றி வசுமதி பொருமிய வண்ணம் லேடீஸ் கிளப்புக்கு செல்கிறாள்.

உமா அசோக்கிடம் தனக்கு இப்போதெல்லாம் அவனை தினமும் பார்க்கும் ஆர்வம் வருகிறது எனக் கூற, அவன் விகல்பமின்றி அவள் எப்போது வேண்டுமானாலும் தன்னைப் பார்க்க வரலாம் என கூறுகிறான். அவனை பார்க்காத நாள் வீணான நாள் என்று அவள் கூற, ஆண்டவனை நினைக்காத நாள்தான் வீணான நாள் என்று பதிலளிக்கிறான். அன்று மாலை எங்காவது வெளியில் போகலாமா என கேட்க, அவனும் அகத்தியர் கோவிலுக்கு போகலாமே என்று கூறுகிறான். அவளோ பீச், சினிமா, ஹோட்டல் என அடுக்க, அதெல்லாம் நேரவிரையம் என்றும், பஞ்சேந்திரியங்களை அடக்காவிட்டல் அவை நம்மை ஆட்கொண்டு விடும் என பதிலளிக்கிறான்.

அதென்ன சார் பஞ்சேந்திரியங்கள் என சோவின் நண்பர் கேட்க, சோ அவை கண், மூக்கு, வாய், காது, தொடுகை என விளக்குகிறார். ஆதி சங்கரர் இது சம்பந்தமாக கூறியதையும் நினைவு படுத்துகிறார். அதாவது வேடனின் சங்கு சத்தத்தைக் கேட்டு மான் மறைவிடத்தை விட்டு வெளியே வந்து ஆபத்தில் மாட்டிக் கொள்கிறது. வாய் ருசிக்கு அடிமைபட்டு மீன் தூண்டில் புழுவை விழுங்கி அகப்படுகிறது. விளக்கைப் பார்த்து விட்டில் அதில் விழுந்து உயிரிழக்கிறது. மதுவின் வாசனையில் மயங்கும் வண்டு பெரிய பூவில் தங்கி சிறிது நேரம் மயங்கி கிடக்க, புஷ்பம் மூடிக் கொண்டு உள்ளே பிராணனை விடுகிறது. பெண்யானையின் ஸ்பரிசத்துக்கு ஏங்கும் ஆண் யானை மனிதனால் வெட்டப்பட்ட குழியில் மாட்டிக் கொள்கிறது. இம்மாதிரி ஒவ்வொரு ஐந்தறிவு ஜீவராசியும் வெவ்வேறு இந்திரியங்களால் அவதி பெற, எல்லா ஐந்து இந்திரியங்களினாலும் அவதி பெறுவது இந்த மனிதன் மட்டுமே.

“உன் வீட்டிலேயே அடிமையாக இருப்பதை விட மோசமான நிலை உண்டா” என அசோக் உமாவைக் கேட்கிறான். “நீ எத்தனை நாட்களுக்குத்தான் இப்படியே பேசப்போகிறாய்” என அலுத்துக் கொள்ளும் உமா, அவன் ஏன் மற்ற பையன்கள் மாதிரி இல்லை என கேட்கிறாள். “ரோஜா ஏன் மல்லிகை மாதிரி இல்லை, செம்பருத்தி ஏன் இருவாட்சி மாதிரி இல்லை. அதுதான் இயற்கையின் பன்முகம். எல்லா பெண்களுமே உமாவாக இருந்தால் போரடிக்காதா? ஒரே ஒரு உமாதான் இருக்க முடியும் என்றும் கூறுகிறான். “என் மனதை நீ புரிந்து கொள்ளவே மாட்டாயா” என உமா அசோக்கைக் கேட்க, மனதையெல்லாம் புரிந்து கொள்வதைவிட அடக்குவதே மேல் என அவன் கூறுகிறான். இயற்கையின் அழகை தான் ரசிப்பதாக அவன் கூற, அப்படியானால் தன் அழகையும் அவன் ரசிக்கிறானா என உமா கேட்கிறாள். ஆம் என சொல்லும் அசோக், எல்லா அழகையும் ரசிப்பதாகவும், ஆனால் அவற்றை தன் வசப்படுத்த்த நினைப்பதில்லை எனவும் கூறி தன்னையறியாமலேயே அவளுக்கு செக் வைக்கிறான்.

தன் வீட்டில் உமா தன் அன்னையிடம் அசோக் வீட்டில் நடந்ததை விவரிக்கிறாள். பர்வதம் வசுமதிக்கு இதெல்லாம் பிடிக்காது என தான் ஏற்கனவே சொன்னதை சுட்டிக் காட்ட, உமா குறும்பாக எல்லா மாமியாருக்குமே தனக்கு மாட்டுப் பெண்ணாக வரப்போகிறவளை குறித்து பயம் இருக்கும் என்றும், ஆனால் போகப்போக சரியாகி விடும் என கூறுகிறாள். அதெப்படி உமா தன்னையும் நீலகண்டனையும் கேட்காமல் அம்மாதிரியெல்லாம் பேசினாள் என கோபத்துடன் கேட்க, நாதன் வசுமதியின் சம்மதம்தான் தனக்கு முக்கியம் எனவும், பர்வதத்தையும் நீலக்ண்டனையும் தன்னால் எப்போது வேண்டுமானாலும் கன்வின்ஸ் செய்ய முடியும் எனக் கூறுகிறாள். அசோக் மாதிரி அரைகுறையெல்லாம் அவளுக்கு கணவனாக வரவேண்டுமா எனவும் அவள் கேட்க, “அசோக் பைத்தியம் எல்லாம் இல்லை அம்மா” என செல்லமாக சிணுங்குகிறாள் உமா. அசோக்கின் மனதை மாற்ற முடியாது என பர்வதம் அவளை அதைரியப்படுத்த, கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என உமா தன்னம்பிக்கையுடன் கூறுகிறாள்.

இன்னொரு தருணத்தில் கல்யாணம் பற்றி அசோக்கின் கருத்தை கேட்கிறாள். Marriage as an institutionக்கு முக்கியத்துவம் உண்டு எனவும், வாழ்க்கையின் ஒரு கட்டத்திற்கும் இன்னொரு கட்டத்துக்கும் நடுவில் அது பாலமாக செயல்படுகிறது எனவும் அசோக் கூறுகிறான். அதை சம்சார சாகரத்தை கடக்க உதவும் பாலமாக பார்க்க வேண்டுமே ஒழிய அங்கேயே இருக்கலாகாது எனவும் கூறுகிறான். அப்பாலத்தை அவனும் கடக்க வேண்டாமா என உமா கேட்கிறாள். தனது பூர்வ ஜன்மாக்களில் தான் அதை ஏற்கனவேயே கடந்து விட்டதாக தன் உணர்வதாக அவன் கூறுகிறான். திருமணம் என்பது அதை பொருத்த மட்டில் தவறு இல்லை எனக்கூறும் அசோக் ரிஷிகளுக்கும் பத்தினி உண்டு என சொல்கிறான்.

இப்போது இது சம்பந்தமாக நண்பர் கேள்வி கேட்க, விளக்கத்தை ஆரம்பிக்கிறார் சோ. ரிஷிகள் வேறு துறவிகள் வேறு என்கிறார் முதலிலேயே. வேத மந்திரங்களை உணர்ந்து அவற்றை மனித குலத்துக்கு அளித்தவர்கள் மகரிஷிகள். பல வகை ரிஷிகள் உண்டு. பிரும்ம ரிஷிகள் (வசிஷ்டர், விஸ்வாமித்திரர்), ராஜரிஷி (ஜனகர்). ராஜரிஷி என்பவர் அரானாக இருந்தால் கடமையை விருப்பு வெறுப்பின்றி செய்பவர்கள் எனக் கூறும் சோ, ஜனகர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியால் அதை விளக்குகிறார் (வீடியோவில் காண்க). தேவர்களுக்கிடையில் இருக்கும் நாரதர் தேவரிஷி. ஆக ரிஷிகள் என்றால் கல்யாணம் செய்யக்கூடாது என பொருள் இல்லை, மேலும் ரிஷிபத்தினிகள் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் எனவும் கூறுகிறார்.

அப்போது ரிஷிகளுக்கு பத்தினி இருந்தது போல ஏன் அசோக்குக்கும் இருக்கக் கூடாது என உமா விடாப்பிடியாகக் கேட்க, தனது சாதனைக்கு அவ்வாறு துணை தேவைப்பட்டால் கடவுளே அவளை அனுப்பி வைப்பார் என அசோக் கூறுகிறான். பல பெண்களுடன் பழகினாலும் ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றற்று வாழ்ந்தார் என கூறு அவன் மேலும் பலரை உதாரணமாகக் காட்டி அவர்கள் போலவே தானும் இருக்க விரும்புவதாகக் கூறுகிறார். உமா மட்டுமல்ல, இதை கேட்கும் வசுமதி கூட திகைப்படைகின்றனர்.

இந்த சீரியலில் ஒவ்வொரு காட்சியும் சிற்பியின் நேர்த்தியோடு செதுக்கப்பட்டு ஜொலிக்கிறது. வாடிக்கையாளரை அணுகும் முறை பற்றி பத்து பதிவுகள் போட்ட இந்த டோண்டு ராகவன், பணமின்றி எந்த வேலையும் செய்யலாகாது என எல்லோரிடமும் கூறி தானும் அதை கடைபிடிக்கும் இந்த டோண்டு ராகவன் முதன்முறையாக எந்த எதிர்பார்ப்புமின்றி, சுயவிருப்பத்துடன் மனதை ஈடுபடுத்தி செய்யும் முதல் முயற்சிதான் இந்தத் தொடர் பற்றிய பதிவுகள். இந்த பதிக்கும் வேலை தரும் மனத்திருப்தியே அவனுக்கு இதில் கிடைக்கும் சம்பளம் என்பதையும் அவன் மகிழ்ச்சியாகவே உணர்கிறான். அதற்கு ஈடில்லை எனவும் அவன் உணர்கிறான். சோ அவர்களின் இந்த மகா யாகத்தில் அவனால் இயன்ற சிறுபங்களிப்புதான் இது என்பதையும் வலியுறுத்துகிறான்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10 comments:

Anonymous said...

Thanks a lot for effort in writing about this serial episodes. I am a regular reader of the same. Your contribution is as important as Cho's to people like me.

-- Partha.

Anonymous said...

You are doing praiseworthy service of giving synopsis of Enge Brahmanan episodes. We jsut came from India to USA and we were going thru the sumamries. Now we foudn a site where they are uplading the vides of tehepisodes. I think you may give the info about the site for others whoo would liek ot view the episodes.

http://www.blog.isaitamil.net/category/jaya-tv-shows/enge-bramanan/

kamala

dondu(#11168674346665545885) said...

@கமலா
இது என்ன விடிய விடிய ராமாயணம் கேட்ட கதையாக இருக்கிறது? ஒவ்வொரு பகுதிக்கும் தலைப்பிலேயே வீடியோவுக்கான சுட்டி தந்தள்ளேனே, அதுவும் அதே இசைதமிழ் ப்ளாக்ஸ்ப்பாட்டின் சுட்டிதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@பார்த்தா
நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

@கமலா
இது என்ன விடிய விடிய ராமாயணம் கேட்ட கதையாக இருக்கிறது? ஒவ்வொரு பகுதிக்கும் தலைப்பிலேயே வீடியோவுக்கான சுட்டி தந்தள்ளேனே, அதுவும் அதே இசைதமிழ் ப்ளாக்ஸ்ப்பாட்டின் சுட்டிதானே.>>>

i DO NOT SEE ANY LINK FOR THE VIDEO IN YOUR EPISODE SUMMARY.

Kamala

dondu(#11168674346665545885) said...

@கமலா
அந்தந்த பகுதிக்கான தலைப்பே அதன் சுட்டிதான். உதாரணத்துக்கு, பகுதி - 73 (15.05.2007):மீதி பகுதிகளிலும் அவ்வாறே லிங்க் தரப்பட்டுள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Uncle.. why not you add: click here to view the episode in video.
Remember that not all are Dondus. There are MANDOOS and MAHA MANDOOS like us!!!!!!!!!!!

kamala ( Not Baby Kamala)

dondu(#11168674346665545885) said...

@கமலா
நிஜமாகவே நீங்கள் பேபி கமலாதான். தலைப்பு வேறு கலரில் இருக்கும்போதே யோசிக்க வேண்டாமா? அங்கு எலிக்குட்டியை கொண்டு சென்றவுடனேயே கை தெரியுமே? எனது மற்றப் பல பதிவுகளில் வந்திருக்கும் ஹைப்பர் லிங்குகளையும் பார்க்கிறீர்கள்தானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Thanks a lot.

mu.ka. ( muttaL Kamala)

dondu(#11168674346665545885) said...

@Kamala
My dear child, please dont call yourself that. I am distressed. Your missing the link is just one of those things.

Regards,
Dondu N. Raghavan

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது