5/29/2009

பன்றிக்காய்ச்சல் பற்றிய ஒரு கலந்துரையாடல் - 28.05.2009

எனது கார் கிழக்கு பதிப்பகத்தை அடைந்தபோது மணி சரியாக மாலை 6 மணி. கீழே அக்கினி பார்வை, லத்தீஃப் ஆகியோர் நின்றிருந்தனர். மேலே நான் அப்போது பார்த்தவர்கள் தங்கவேல், பத்ரி, வடிவேல், (இன்னொரு தங்கவேல்) ஆகியோர். சற்று நேரத்தில் கலந்துரையாடலை துவக்கி நடத்துபவராக மருத்துவர் ப்ரூனோ வந்தவுடன் கூட்டம் களை கட்டியது. மனிதர் கையில் லேப்டாப் கொண்டு வந்திருந்தார். ஒரு வேளை கூட்டம் நடக்கும்போதே பதிவையும் எழுதிவிடப் போகிறாரா என நான் கேட்டதில் சற்றே கலகலப்பு ஏற்பட்டது. பேசாமல் அவரிடமிருந்து அதை இரவல் வாங்கி எனது வழமையான பதிவை அதிலேயே போடலாம் என ஒருவர் ஆலோசனை தந்ததில் ஓரிருவர் முகத்தில் கவலைக் குறிகள் தென்பட்டன என்பது எனது கற்பனையாகக் கூட இருக்கலாம்.

பத்ரி வழக்கம்போல தனது அறிமுகப் பேச்சை தரும் முன்னால், ப்ரூனோவின் லேப்டாப்புக்கு மின் கனெக்‌ஷன் தர ஏற்பாடுகள் செய்தார். பிறகு பேசிய அவர் தொட்ட விஷயங்கள்: மெக்சிகோவில் துவங்கிய இந்த பன்றிக் காய்ச்சல் இபோது உலகம் முழுதும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை ஜப்பானியர் ரொம்பவும் சீரியசாகவே எடுட்து கொண்டுள்ளனர். தமிழக அரசு பல நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. இந்த பன்றிக் காய்ச்சல் பல அச்சங்களை எழுப்பியுள்ள நிலையில் அது பற்றிய பொது அறிவு வளர வேண்டும். வலைப்பதிவர்கள் லெவலில் இதை செய்வதே இந்த முயற்சி. நாம் அறிவார்ந்த கருத்துக்களை உருவாக்க வேண்டும். தேவையின்றி பயமுறுத்தல்கள் கூடாது. பொதுவான விவாதங்களுக்கு பிறகு ஒரு சிறு புத்தகமும் வெளியிடும் எண்ணம் உள்ளது. இதையெல்லாம் கூறிவிட்டு, ப்ரூனோவின் பேச்சுக்கு பிறகு கலந்துரையாடல் நடைபெறும் என்றார்.

கடைசியாக ப்ரூனோவை பற்றிய சிறு அறிமுகமும் தரப்பட்டது. மருத்துவ படிப்பை முடித்து விட்டு அரசு மருத்துவத் துறையில் பணி புரியும் அவர் இப்போது நரம்பியல் துறையில் MCH. செய்வதாக குறிப்பிட்டார். நரம்பியல் மருத்துவத் துறை என்றால் என்ன என நான் கேட்க அது ந்யூரோ சர்ஜரி என தெளிவு பெற்றேன். மேலும் பதிவுகள் போடுவதில் முன்னணியில் அவர் இருக்கிறார். அவர் ஜோஸ்யமும் பார்ப்பார் என்ற தகவலை முழுமை தரும் நோக்கில் நான் தெரிவித்தேன்.

ப்ரூனோ தனது வழக்கமான நேரடி அணுகுமுறையை மேற்கொண்டு பேச்சை ஆரம்பித்தார். முதற்கண் இது சம்பந்தமாக பாவிக்கப்படும் சில கலைச்சொற்களுக்கு விளக்கம் தந்தார். பன்றிக் காய்ச்சல், பறவை காய்ச்சல் ஆகியவை பற்றி விஞ்ஞான பூர்வமான விளக்கங்கள் தந்தார். எண்டெமிக் (உட்பரவு நோய்), எபிடெமிக் (கொள்ளை நோய்), பாண்டெமிக் (உலகம் பரவும் நோய்) என்றெல்லாம் வகைபடுத்தியது எந்தெந்த அடிப்படையில் என்பதையும் அவர் குறிப்பிட்டார். சில பிரதேசங்களீல் அதிகமாகக் காணப்படும் நோய்கள் சாதாரணமாக எண்டெமிக் வகையில் வரும். உதாரணத்துக்கு மலேரியா நோய் ராமநாதபுரம், தூத்துக்குடி கடற்கரையோரம் ஆகிய இடங்களில் பரவலாகக் காணப்படும். வேறு சில இடங்களில் யானைக்கால் நோய் தென்படும். கடற்கரை பிரதேசங்களிலிருந்து விலகிச் செல்ல செல்ல, Goitre என்னும் தைராய்ட் சம்பந்தப்பட்ட நோய் அயோடின் குறைபாட்டால் அதிகரிக்கும். புரத சத்துக்குறைவு கூட ஒரு வகை எண்டெமிக் நிலைதான். நல்ல வேளையாக அது தமிழகத்திலிருந்து மறைந்து வருகிறது என்றார் ப்ரூனோ.

அதே சமயம் எண்டெமிக் அளவில் உள்ள நோய் திடீரென அதிக அளவில் காணப்பட்டால் அது எபிடெமிக்காக மாறியதற்கான சாத்தியக்கூறு உண்டு. சாதாரணமாக 1000 பேரில் நான்கு பேருக்கு ஒரு நோய் என ஒரு பிரதேசத்தில் இருப்பது 1000 பேரில் 400 பேர் என அதிகரித்தால் அதை எபிடெமிக் என்று கூறலாம். Madras eye கூட இந்த எண்டெமிக்/ எபிடெமிக் அளவில் வருவது உண்டு. புயல், சுனாமி இயற்கை சீற்றங்கள் காரணமாகவும் எபிடெமிக் உருவாகலாம். ஆகவே அம்மாதிரி சமயங்களில் காலரா, டைஃபாய்ட் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இந்த எண்டெமிக்/எபிடெமிக் நோய்கள் கிருமி சார்ந்தோ அல்லாது சாராமலோ இருக்கலாம். உதாரணத்துக்கு போபால் வாயு லீக் சம்பவம் உருவாக்கிய எபிடெமிக் கிருமி சாராததது. மணலியிலும் சில ஆண்டுகளுக்கு முன்னால் வாயு கசிவால் அந்த ஏரியாவில் எபிடெமிக் ஏற்பட்டது. இதையெல்லாம் point-source epidemic என்பார்கள். அதனாலேயே அணுசக்தி உலைகள் கடற்கரையோரமாக அமைக்கப்படுகின்றன. நதிக்கரையோரத்தில் அல்ல. எண்டெமிக் நோய்கள் உடலின் தடுபு சக்தி குறைந்தால் அதிகப்பேருக்கு பரவி எபிடெமிக்காக உருவெடுக்கிறது. அதே சமயம் எண்டெமிக் நோயை கண்ட்ரோல் செய்வது கஷ்டம், ஆனால் எபிடெமிக்கை ஒப்பீட்டு அளவில் சற்று சுலபமாக கண்ட்ரோல் செய்ய இயலும்.

கிருமிகள் மனித உடலை எப்படி தாக்குகின்றன என்பதை பிறகு அவர் விளக்கினார். மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவும் நோய்களில் எயிட்ஸை விட இன்ஃப்ளூயன்ஸா அதிக வேகமாக பரவுவதன் காரணத்தையும் அவர் விளக்கினார். எய்ட்ஸ் பரவ ரத்தம் தேவை ஆனால் இன்ஃப்ளுயென்ஸஸாவோ தும்மினாலே பரவும் தன்மையுடையது என்பதே இதன் காரணம். இது பன்றிக்காய்ச்சலுக்கும் பொருந்தும். சிஃபிலிஸ் என்னும் மேக நோய் உருவாக 90 நாட்கள், ஆனால் இன்ஃப்ளுயென்ஸஸாவுக்கு 3 நாட்களே போதுமானது.

பிறகு பாசி மற்றும் பாக்டீரியா பற்றி பேச ஆரம்பித்தர். நான் புரிந்து கொண்டது என்னவென்றால் பாசியிடம் பச்சயம் இருப்பதால் தனது உணவை தானே உற்பத்தி செய்து கொள்ள இயலும். ஆனால் பேக்டீரியாவுக்கு ஒரு host தேவைப்படுகிறது. பாக்டீரியாவிலும் பல காம்பினேஷன்கள் உண்டு. அவற்றில் சில தானும் பலன் பெற்று அவை குடியிருக்கும் மனிதனுக்கும் நல்ல பலன் இருக்கும். சிலவற்றில் பாக்டீரியாவுக்கு மட்டும் நல்லது நடக்கும், மனிதனுக்கு நல்லதோ கெடுதலோ நடக்காது. இன்னும் வேறு சில பாக்டீரியாக்கள் விஷயத்தில் அவற்றுக்கு மட்டும்தான் நன்மை, மனிதனுக்கு சங்குதான்.

வைரஸ் என்பது பாக்டீரியாவை விடச் சிறியது. அவற்றில் சில உயிருடன் இருக்கும், சிலவற்றுக்கு உயிர் இருக்காது. பாக்டீரியாவின் அளவு பெரிதாயிருப்பதால் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் சுலபமாகின்றன. வைரசிடம் வெறும் ந்யூக்ளியஸ் மட்டும் இருப்பதால் அவற்றை கட்டுப்படுத்துவது கடினம்.

கடந்த நூற்றாண்டில் உலகம் பரவும் நோய்களில் முக்கியமானது வைரஸ்கள் மூலமே பரவின. பிளேக் போன்ற கொள்ளை நோய்கள் பாக்டீரியா மூலம் பரவுவதால் அவற்றுக்கு மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

பிறகு இன்ஃப்ளூயென்ஸா பற்றி விரிவாக பேச ஆரம்பித்தார். அதற்கு இரண்டு புரதங்கள் உண்டு. ஒரு வகை H1, H2, H3 என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இன்னொரு வகை N1, N2, N3 என அழைக்கப்படுகிறது. எச் புரதம் வைரசை உடலிலுள்ள செல்லுக்குள் செலுத்துகிறது, என் வகை புரதம் அதே வைரசை உடலிலுள்ள செல்லிருந்து வெளியேற்ற உதவுகிறது. இந்த இரு புரதங்களூம் வெவேறு சேர்க்கைகளில் உள்ளன. உதாரணத்துக்கு பன்றி காய்ச்சலில் நாம் எதிர்கொள்வது H1N1 வைரசே. சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்த பறவைக் காய்ச்சல் H5N1 வைரசால் வந்தது. இவ்வாறு வெவ்வேறு சேர்க்கைகள் ஏற்படும்போது சில சமயம் பலவீனமான வைரசும் சில சமயம் பலம் வாய்ந்த வைரசும் உருவாகின்றன. சில எதேச்சையான சேர்க்கைகள் உயிருக்கே அபாயம் விளைவிக்கின்றன. இன்ஃப்ளுயென்சா பல உயிரினங்களில் காணப்படுகின்றன. வைரஸ்களின் மாற்றம் சில சமயம் ஷிஃப்டாகவும் சில சமயம் ட்ரிஃப்ட் ஆகவும் அமைகின்றன. முந்தையது அதிக அபாயமானது. அதி வேகமாக பரவக் கூடியது. உதாரணத்துக்கு இப்போது இருக்கும் பன்றிக் காய்ச்சல் இரண்டே மாதங்களில் உலகம் பரவும் நோயாக உருவெடுத்துள்ளது. அதுவும் 2003-ல் வந்த சார்ஸ் கலாட்டாவுக்கு பிறகு இப்போதெல்லாம் WHO வெகுவேகமாகவே எதிர்வினை புரிகிறது.

வழக்கம் போல இங்கும் முன்கூட்டி தடுப்பது நல்லதாகவும் எளிதகவும் கருதப்படுகிறது. நோய் நிலைகொண்ட பிறகு ட்ரீட்மெண்ட் என்பது கடினமாகிறது. இப்போதெல்லாம் நோய் பற்றிய தகவல்கள் தினசரி பரிமாறப்படுகின்றன. முன்னெல்லாம் மாதம் ஒரு ரிபோர்ட் என்ற நிலைதான் இருந்தது. இப்போது அதுவே தினசரி அளவில் ஆனதற்கு நமது எச்சரிக்கை உணர்வே காரணம். வைரஸ் நோய்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னால் மருந்துகளே கிட்டத்தட்ட இல்லை என்னும் நிலையிலிருந்து மாறி இப்போது பல மருந்துகள் வந்துள்ளன. அவற்றில் பல எய்ட்ஸ் கிருமிக்கு எதிராக கண்டுபிடிக்கும் முயற்சியில் உருவாயின என்பது ஒரு நகை முரணே. பன்றிக் காய்ச்சலை கண்டறிய நம்பகமான முறை ரத்தப் பரிசோதனைகளே. ரத்த மாதிரிகள் பூனாவுக்கு அனுப்பப்படுகின்றன. ஸ்பாட் செக் எனப்படும் துரித சோதனை அவ்வளவு நம்பத் தகுந்ததில்லை என்பதையும் ப்ரூனோ விளக்கினார்.

பிறகு நான் முதலில் கேட்ட பிளேக் பற்றிய விளக்கங்களை அவர் தந்தார். பிளேக் rat flies மூலம் பரவுகின்றன என அவர் விளக்கினார். எலிகளிடம் அந்த rat flies இருப்பு ஒரு சமநிலை தாண்டினால் அது மனிதருக்கும் பரவ ஆரம்பிக்கிறது என்றார். உதாரணத்துக்கு சூரத்தில் மனித அலட்சியத்தால் துணி வேஸ்டுகளில் எலிகள் குடிபுகுந்து பிளேக் பரவியது என்றும் நல்ல வேளையாக துரித நடவடிக்கை எடுத்ததால் சூரத்துக்கு வெளியே அது பரவுவதிலிருந்து தடுக்க முடிந்தது என்றார்.

பன்றிக் காய்ச்சல் என்பதை விட இன்ஃப்ளூயென்ஸா என்ற வார்த்தையையே அவர் அதிகம் தேர்ந்தெடுத்தார். பறவைக் காய்ச்சல் என்னும் H5N1 பறவையிடமிருந்து மனிதனுக்கு வந்தது. அதே சமயம் H1N1 எனப்படும் பன்றிக் காய்ச்சலோ மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது. பிறகு ஏன் பன்றிக் காய்ச்சல் என அழைத்தார்கள் என்றால் அது பன்றிகளிடமும் காணப்பட்டது என அவர் கூறினார்.புது புது வைரசுகளை கண்டுபிடித்து பயோ ஆயுதங்களாக பல அரசுகள் உபயோகிக்கின்றனவா என்ற கேள்விக்கு அவர் ஏற்கனவே இருக்கும் வைரசுகளை வைத்து பயோ ஆயுதங்களை உருவாக்க இயலும் நேரத்தில் இதற்காக மெனக்கெட்டு புது வைரசுகள் கண்டுபிடிப்பதில்லை, மேலும் அது எளிதும் அல்ல என்றார்.

அதே சமயம் தங்களது மருந்துகள் அதிகம் விற்பனையாவதற்காக சில மருந்து கம்பெனிகள் அவற்றை எடுத்து கொள்ளும் நிலைகளை சௌகரியம் போல மாற்றிக் கொள்கின்றன எனவும் கூறினார். தான் மருத்துவம் படிக்கும்போது ரத்த அழுத்தம் மேல் அளவு நோயாளியின் வயது ப்ளஸ் 100 என்னும் அளவுக்கு மேல் இருந்தால் மருந்து உட்கொள்ள வேண்டும் என்ற நிலையிலிருந்து (அதாவது 60 வயது நோயாளி அதிக ரத்த அளவு 160க்கு மேல் போனால் மருந்து உட்கொள்ளலாம் என்ற நிலை மாறி இப்போது 120க்கே மருந்து என கூறப்படுவதை அவர் நாசூக்காக சுட்டிக் காட்டினார். மேலும் சில போலி மருத்துவர்கள், லேகியம் விற்பவர்கள் சில நோய்களுக்கு மருந்துகள் இல்லை என்ற நிலை இருக்கும்போதே தாங்கள் மருந்து தருவதாக விளம்பரம் செய்து காசு பார்த்துள்ளதையும் கூறினார்.

இப்போது பத்ரி ஒரு கேள்வி கேட்டார். இந்த பன்றிக் காய்ச்சலை எதிர்த்து போராடும் விஷயத்தில் அரசு த்ரப்பிலிருந்து செய்யக் கூடியது என்ன என அவர் கேட்டார். இதற்கு ஒரு குறிப்பிட்ட விடை அளித்தல் கடினமே. இந்த வைரஸ்கள் உஷ்ணத்தால் பாதிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் தட்ப வெப்ப நிலை இப்போதைய பன்றிக் காய்ச்சலை எவ்வாறு பாதிக்கும் என்பதை சொல்வது கடினம் என்றார் ப்ரூனோ. அரசுக்கு பொறுப்புகள் அதிகம். தேவையின்றி பயமுறுத்துவதும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே நிலைமையை நன்கு அவதானித்து செயல்பட வேண்டும். உதாரணத்துக்கு சார்ஸ் நோய் இந்தியாவுக்குள் வரவே இல்லை. 2006-ல் வ்ந்த சிக்கன் குனியா கேரளாவையும் தமிழ்நாட்டையும் தாக்கியது, ஆனால் ஆந்திராவும் கர்நாடகமும் தப்பித்தன. ஆகவே புலி வருது கதையை தவிர்த்தல் முக்கியம். இல்லாவிட்டால் நிஜமான அபாயம் வரும்போதுஅலட்சியமாக இருந்துவிடும் அபாயம் உண்டு. இதுவரைக்கும் பயமுறுத்தும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை. ஆனால் நடக்கவும் வாய்ப்பு உண்டு. ஆகவே ஜாக்கிரதையாக இருப்பது மிகமிக முக்கியம். போதுமான அளவு மருந்தை மருந்தை தமிழக அரசு இப்போது கையிருப்பில் வைத்துள்ளது என்பதையும் ப்ரூனோ கூறினார்.

காலரா போன்ற நோய் மனித உடலை எவ்வாறு தாக்குகிறது என்பதையும் அவர் உதாரணங்களுடன் விளக்கினார். சில மரணங்கள் கிருமிகள் மூலமாகவும் இன்னும் சில மரணங்கள் வேறுகாரணங்களால் ஏற்படுகின்றன என்பதையும் அவர் கூறினார். மனித உடலின் auto immune ஏற்பாடு அதிகமாக செயல்படுவதாலும் சில மரணங்கள் ஏற்படுகின்ர்றன என்பதையும் அவர் எடுத்துரைத்தார். சிலர் மோசமாகவும், சிலர் மிதமாகவும் தாக்கப்படுகின்ர்றனர். சிலருக்கு பாதிப்பே இல்லை என்ற நிலை கூட காணப்பட்டுள்ளது என்றார் அவர். டிப்தீரியா, நிமோனியா ஆகியவை செயல்படும் வித்தத்தையும் கூறிய அவர் கடைசியில் பார்த்தால் மூளைக்கு ரத்தம் சப்ளை ஆவது பாதிக்கப்படுவதே மரணத்துக்கு காரணம் என்பதையும் விளக்கினார். தலையணையால் முகத்தை மூடி மூச்சுத் திணற வைத்து கொல்லப்படுவதை போன்றது அவ்வகை மரணம் என்பதையும் கூறினார். போபால் சோகத்திலும் கூட எல்லோருமே இறந்து விடவில்லை, சிலருக்கு வேறு நோய்கள் வந்தன, சிலர் முழுமையாக தப்பினர். எல்லாம் சம்பந்தப்பட்டவர்களின் உடல்கூறே காரணம் என்பதையும் கூறினார். auto immune ஏற்பாடுகள் பாதிப்பை தவிர்க்க சில மருந்துகள் அதை குறைக்கவும் தரப்படுகின்றன எனவும் அவர் கூறினார். சில ஸ்டீராய்டுகள் அவ்வகையில் அடங்கும் எனவும் குறிப்பிட்டார்.

ஆனால் இதெல்லாம் தியரி லெவலிலேயே இருக்கின்றன என்பதையும் அவர் நினைவூட்டினார். ஒவ்வொரு தியரிக்கும் ஒரு ஆதரவு/எதிர்ப்பு கோஷ்டி உண்டு என்பதையும் கூறினார். இத்தருணத்தில் சின்னம்மை என்னும் சிக்கன் பாக்ஸ் குழந்தைகளுக்கு பொதுவாக உயிர் அபாயம் விளைவிப்பதில்லை. ஆனால் பெரியவர்க்ளுக்கு அது வந்தால் கவலைக்குரிய விஷயமே என்றார். ஈக்களும் கொசுக்களும் நோய் பரப்பும் விதங்களில் மாறுவதால் அவற்றை எதிர்க்கும் நடவடிக்கைகளின் விளைவுகளும் வெவ்வேறு அளவில் உள்ளன என்றார் அவர். கொசுக்களை ஒழித்தால் மலேரியாவை அடியோடு தடுக்கலாம், ஆனால் ஈக்களை ஒழிப்பதால் அதே மாதிரி வாந்தி பேதி மறையாது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

தங்கவேல் என்பவர் சித்த மருத்துவம் படித்தவர், தொத்து நோய் ஆராய்ச்சியாளர். அவர் மருத்துவர் ப்ரூனோ சில மருந்து கம்பெனிகள் மேலே செய்ததாகக் கூறப்படுவதை மறுத்தார். இம்மாதிரி கைட்லைன்ஸ்கள் எல்லாம் பலரால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும், யாரும் தன்னிச்சையாக முடிவு எடுக்க இயலாது எனவும் கூறினார். ப்ரூனோ இம்மாதிரி ஒரு முறை நடந்தது பெரிய ஸ்கேண்டலாக உருவெடுத்தது பற்றி கூறினார். இந்த விஷயத்தில் நான் புரிந்து கொண்டதை கூறினேன், தவறு இருந்தால் ப்ரூனோ/தங்கவேல் திருத்தலாம்.

கடைசியில் பத்ரி நன்றியுரை தந்து ப்ரூனோவுக்கு சில கிழக்கு பதிப்பக வெளியீடுகளை பரிசாகத் தந்தார். எல்லாம் முடிந்தவுடன் கேபிள் சங்கர் மேலே வந்து மீட்டிங் முடிந்ததா என கேட்டார். முடிந்தது என நான் சொன்னதும் அவர் முகத்தில் நிம்மதி பரவியது என நான் உணர்ந்தது வெறும் கற்பனையாகக் கூட இருக்கலாம்.

மணி எட்டேகால் ஆன அளவில் கீழே இறங்கி என் காரை வரவழைத்து நான் எல்லோரிடமும் விடை பெற்று சென்றேன். உறவினர் வீட்டுக்கு போய் விட்டு வீட்டுக்கு வர மணி 11 ஆகி விட்டது. உடனே தூக்கம். விடியற்க்காலை 02.50-க்கு ஆரம்பித்தவன் 05.00 அளவில் முடித்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இந்த கலந்துரையாடலின் ஆடியோவை பத்ரி அவரது பதிவில் தந்திருக்கிறார். அவருக்கு என் நன்றி.

15 comments:

பழமைபேசி said...

வழக்கம் போலவே, விரைவான விபரமான செய்தி! நன்றி!!

புருனோ Bruno said...

சின்னம்மை --> சிக்கன் பாக்ஸ் :) :)

dondu(#11168674346665545885) said...

@ப்ரூனோ
திருத்தம் செய்து விட்டேன்.

மீசல்சும் சின்னம்மையும் ஒன்று இல்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Boston Bala said...

அருமை

சரவணகுமரன் said...

தூரத்தில் இருக்கிறோம்... இக்கூட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று நாங்கள் கவலைப்பட தேவை இல்லை... உங்கள் பதிவுகள் அதை பூர்த்தி செய்கிறது...

சரவணகுமரன் said...

நன்றி சார்...

M Arunachalam said...

Very Informative & Educative.

Thanks to those who arranged for that meeting & also to you for sharing such useful info with lay readers like me.

மோகன் said...

நல்லதொரு விவரமான,விளக்கமான, வழக்கமான பதிவு...
நன்றி..
மோகன்.

அக்னி பார்வை said...

முழுகவரேஜை பக்காவாக தந்துவிட்டீர்கள்.. நன்றி

வால்பையன் said...

புரிந்து கொள்ளகூடிய விவரணை!

இந்த வயசுல விடிய விடிய முழிச்சிருந்து பதிவு போடணுமா?

தூங்கி எழுந்து காலையில போட்டா என்ன?

வலைஞன் said...

உயர் திரு ராகவன் அவர்களுக்கு,
இந்த கூட்டதிற்கு நேரில் வந்திருந்தால் கூட இவ்வளவு தெளிவாக புரிந்திருக்குமா என்பது ஐயமே.இனிமேல் நீங்கள் செல்லும் கூட்டத்திற்கு பேச்சாளரையும் உங்களையும் தவிர யாரும் வரமாட்டார்கள் என்பதால் நீங்கள் செல்லப்போகும் இடத்தை மிக ரகசியமாக வைத்திருக்க வேண்டும்
மனமார்ந்த நன்றி
அன்புடன்,
வலைஞன்

Ganesan said...

இந்த கூட்டம் பற்றி முன் அறிவிப்பு ஏதேனும் பதிவர் போட்டிருந்தால் நான் நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன்

sury siva said...

ஸ்வைன் ஃப்ளூ எனவும் தமிழில் பன்றிக்காய்ச்சல் எனவும் மருத்துவத்தில் ஹெச்1என்1 எனவும்
விவரிக்கப்படும் வைரஸ் நோய் தற்சமயம் அதிருஷ்ட வசமாக பெரும்பாலும் தீவிரமான தாகவோ
அல்லது ஏப்ரல் மாதம் மெக்சிகோவை தாக்கியபபொழுது அது எப்படி பரிமணிக்கும் தீவிரமுடையது
என்று நினைக்கப்பட்டதோ அந்த அளவுக்கு இல்லை எனவும் கூறப்படுகிறது.

தற்சமயம் நான் அமெரிக்காவில் இருப்பதால் இங்கு காணப்படும் நிலையின் அடிப்படையிலும்
அதிகார பூர்வமான் செய்திகள் அடிப்படையிலும் இந்த கிருமி மனிதரிடம் இருந்து மனிதருக்கு
எளிதில் பரவக்கூடியதே. இருப்பினும் மனிதரிடமிருந்து பன்றிகளுக்குச் செல்லும் என இன்னமும்
உறுதியாகச் சொல்லவில்லை. கானடா நாட்டில் இந்த நோய் கண்டவர் பன்றிகளுக்கும் பரப்பினார்
என்பது ஒரு சான்று தான் இன்னமும் கிடைத்திருக்கிறது.

நிற்க. இந்த வைரஸ் பன்றிகளைத் தாக்குமுன்னே மனிதர்களிடையே அமெரிக்காவில், ஏன் ! மெக்ஸிகோ
வுக்கு செல்லுமுன்பெயே இங்கு அமெரிக்காவில் ஸைலன்டாக இருந்திருக்கிறது என்பது சில நிபுணர்கள்
கருத்து. ஏன் மெக்ஸிகோ வில் இருந்த தீவிரம் அமெரிக்காவில் இல்லை என்பதும் இது சீதோஷ்ண நிலையின் அடிப்படையில் மறுபடியும் ஃபால் ( நமது இலையுதிர் காலம் ) போது தீவிரமாக வரலாம்
எனவும் கூறுகிறார்கள்.

இதுபற்றிய விவரங்கள் எனது வலைப்பதிவு ல் அவ்வப்போது அப்டேட் செய்யப்படுகின்றன்.
இதுபற்றி மேலும் தகவல்கள் அறிய விருப்பமுள்ளோர் அங்கு செல்லலாம்.
http://Sury-healthiswealth.blogspot.com
இயற்கையின் அதிசயம் ஒன்று கிருமிகளின் எல்லைக்கோடாகும். இந்த எல்லைக்கோட்டை மீறி
பறவைகளுக்கு பொதுவாக வரும் கிருமிகள் விலங்கினங்க்ளுக்கு வரும்பொழுதோ அல்லது விலங்கினங்களுக்கு
வரும் கிருமிகள் மனிதருக்கு வரும்போது சிதைந்து ஒரு புதிய வகை கிருமி உண்டாகிறது. உண்மையில்
பன்றிகளுக்கு வந்த கிருமிக்காய்ச்சல் கிருமியும் இப்பொழுது மனிதர்களுக்கு வந்திருக்கிற பன்றிக்காய்ச்சலும் ஒரே கிருமி அல்ல. சிதைவின் மூலம் புதிய உருப்பெற்றதாகும்.

மருத்துவ நிபுணர்களை திடுக்கிடவைப்பதே புதிய புதிய சிதைவுகள்தான்.9possibly of further mutatations in the code)ஆயினும் இன்னும் ஒரு ஆறு
மாதங்களில் இதற்கான தடுப்பூசி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதை வாங்கும் சக்தி
ஏழை நாடுகளுக்கு இருக்குமா என்று தான் தெரியவில்லை.

இன்றைய தேதியில் டாமிஃப்ளுவின் விலை அமெரிக்காவில் 75 டாலர். ஒரு டாலர் மதிப்பு 50 ரூபாய்.


சுப்பு ரத்தினம்.
Stamford, CT, USA

வஜ்ரா said...

//

வைரஸ் என்பது பாக்டீரியாவை விடச் சிறியது. அவற்றில் சில உயிருடன் இருக்கும், சிலவற்றுக்கு உயிர் இருக்காது. பாக்டீரியாவின் அளவு பெரிதாயிருப்பதால் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் சுலபமாகின்றன. வைரசிடம் வெறும் ந்யூக்ளியஸ் மட்டும் இருப்பதால் அவற்றை கட்டுப்படுத்துவது கடினம்.
//

ஓவர் சிம்பிளிஃபிகேஷனால் வந்த தவறான புரிதல் இது.

வைரசுக்கு உயிர் இருக்கா இல்லையா என்று இதுவரை யாரும் கண்டறிந்ததில்லை. (உயிர் என்றால் என்ன என்ற கேள்விக்கு விடையும் இதில் அடங்கும்).
வைரஸுக்கு நூக்ளியஸ் எல்லாம் கிடையாது. வெறும் டி.என்.ஏ என்ற டீஆக்ஸி ரிபோ நூக்ளிக் அமிலம் அல்லது ஆர்.என்.ஏ என்ற ரிபோ நூக்ளிக் அமில இழையை (அது ஒன்றாகவோ இரண்டாகவோ இருக்கலாம்) புரதத்தால் ஆன ஒரு பையில் போட்டுவைத்தால் எப்படி இருக்குமோ அது தான் வைரஸ்.


சில வைரஸ்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தில் கூட பரவும் (இன்ஃப்ளூயன்ஸா போன்றவை) சளி, இருமல் போன்ற தொற்றுவியாதிகள் தரும். சில வைரஸ்கள் காற்று பட்டு காய்ந்த உடனேயே நோய் பரப்பும் சக்தியை இழந்துவிடும் (இறந்துவிடும்) நம் எய்ட்ஸ் மற்றும் ஹெபடைடிஸ் வைரஸ் போல்.

sury siva said...

// வைரசுக்கு உயிர் இருக்கா இல்லையா என்று இதுவரை யாரும் கண்டறிந்ததில்லை. (உயிர் என்றால் என்ன என்ற கேள்விக்கு விடையும் இதில் அடங்கும்).//


வைரஸுக்கும் பாக்டீரியாவுக்கும் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை துல்லியமாக ஆராயந்திருக்கிறார்கள்.
வைரசுக்கு உயிர் உண்டா என்பதும் சரியாகவே கணக்கிடப்பட்டுள்ளது.

மருத்துவ அதிகாரபூரவமான வலை ஒன்றில் இதனைக் காணலாம்.
http://www.agu.edu.bh/elun/newsletter-Ap/Bacteria\html

சுப்பு ரத்தினம்.
ஸ்டாம்ஃபோர்டு, கனெக்டிகெட்.
visit:
http://Sury-healthiswealth.blogspot.com

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது