5/24/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் 77 & 78

பகுதி - 77 (21.05.2009):
உமா அசோக்கிடம் தான் அவனுடன் வந்து பழகியதின் பின்புலனை விவரிக்க, விஸ்வாமித்திரரை மயக்க மேனகையை அனுப்பியது போல உன்னை அனுப்புகிறார்களா என அவன் கூறுகிறான்.

“இந்த மேனகா கதையை நானும் கேள்விப்பட்டிருக்கேன், அது என்ன சார் கதை” என சோவின் நண்பர் குழந்தை மாதிரி கேட்கிறார். சோ பேசுகிறார். “சாதாரணமாக நமக்கு தெரிந்த மேனகா விவரங்கள் எல்லாம் காளிதாசனின் சாகுந்தலை நாடகத்திலிருந்துதான் வருகின்றன. ஆனால் மேலதிக விவரங்கள் ராமாயணத்திலேயே கூறப்பட்டுள்ளன. மிதிலைக்கு ராம லட்சுமணர்கள் விஸ்வாமித்திரரை தொடர்ந்து வருகின்றனர். அங்கு ராமருக்கு அகல்யையின் புத்திரரும், ஜனகரின் புரோகிதருமான சதானந்தர் விஸ்வாமித்திரரின் பெருமைகளை கூறுகிறார். அதில் ஒரு அரசர் என்னும் நிலையிலிருந்து தன்னை பிரும்ம ரிஷியாக அவர் உயர்த்திக் கொண்ட வரலாறு இருக்கிறது. அவ்வாறு அவர் ஆவதற்காக கடுமையான தவங்கள் மேற்கொள்ள, பல முறை அவர் தவத்துக்கு பங்கம் வருகிறது. பலமுறை அதற்கு காரணம் தேவர்களின் தலையீடுதான். அத்தலையீடுகளில் ஒன்றுதான் மேனகாவை அனுப்பி அவர் மனதை கலைத்தது. அவற்றையெல்லாம் மீறி அவர் பிரும்மரிஷியானார் என்பதுதான் அவர் சாதனை”.

அசோக் இங்கு உமாவிடம் அவளை மேனகா மாதிரி தன்னை அனுப்பித்தார்களா எனக் கேட்டு, வாய்விட்டு சிரிக்கிறான். “நீ இந்த மாதிரி மனம் விட்டு சிரிப்பதை நான் இப்போதுதான் பார்க்கிறேன்” என உமா ஆச்சரியத்துடன் குறிப்பிடுகிறாள். “மாயையை ஜயித்தால்தால்தான் ஆத்மானுபூதிகை கிடைக்கும். அந்த மாயை உன் அன்பு ரூபத்தில் வந்தால் வரட்டுமே. பொன்னிலிருந்து மாசை எடுக்க அதை தீயில் காண்பித்தது போல என்னை எரித்து என் ஆன்மாவை மாயையிலிருந்து இறைவன் காப்பாறுகிறான். எனக்கு அது தேவையே” என கூறுகிறான்.

“உனக்கு என் மேல் இரக்கம் வரவில்லையா” என உமா கேட்க, “அதனால் உனக்கு என்ன பலன்? உன் மேல் அன்பு இருப்பதால்தான் உன்னிடம் வந்தேன்” என்கிறான். “இதுதான் காதல்” என உமா கூற, “நீ சொல்வது அன்பை கொடுத்து அன்பைக் கேட்கும் செயல். அது எதிர்ப்பார்ப்பில் அளிக்கப்படுகிறது. எதிர்ப்பார்த்தது கிடைக்கவில்லையென்றால், டிப்ரஷனுக்கு காரணமாகிறது. ஆனால் தன்னலம் கருதாது எல்லோரிடமும் செலுத்தும் அன்பால் அம்மாதிரி தொல்லைகள் எல்லாம் வராது” என்கிறான் அசோக். “இந்த மாதிரி விதவிதமான அன்பெல்லாம் வேண்டாம், என்னைப் பொருத்தவரை எனக்கு உன் அன்பு போதும்” என உமா கூறுகிறாள். “அதனால் உனக்கு என்ன லாபம்? சரி, என்னுடன் வா” எனக்கூறி அவளை தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறான்.

உமாவுடன் தன் வீட்டுக்கு வருகிறான். அசோக். திகைத்து நிற்கும் வசுமதியிடம் தான் போய் அழைத்ததால்தான் அவள் வந்ததாகவும், இனிமேல் அவள் எப்போது வேண்டுமானாலும் தன்னைப் பார்க்கலாம் என்றும் கூறி விட்டு அசோக் உள்ளே போகிறான். அவனை பின் தொடர்வதற்கு முன்னால் உமா வசுமதியிடம், தான் கூறுவதை அவள் எதிர்ப்பதமாக புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறிவிட்டு பேசுகிறாள். “எனக்கு இந்தாத்துக்கு வர பரம இஷ்டம். உங்க மூஞ்சியெல்லாம் பார்க்க குஷியா இருக்கு. அசோக் என்னை வரவே கூடாது என்றான். வேறே வழியில்லாதுதான் வந்தேன். நான் இங்கே வருவது உங்களுக்காகத்தான். அசோக்குக்காக இல்லை. நான் வெளியே போறேன்” என்றெல்லாம் கூறி விட்டு, “ஸ்வீட் மாமி” என செல்லமாக அவள் கன்னத்தில் தட்டி விட்டு உள்ளே திருப்தியுடன் செல்கிறாள்.

உள்ளே வந்து இம்மாதிரி தன்னை உமா பழி தீர்த்து கொண்டது பற்றி வசுமதி சமைய்ற்கார மாமி கோமதியிடம் புலம்ப, அவள் முன் ஜாக்கிரதையாக தான் வெறும் சமையற்காரி என்றும், இது சம்பந்தமாக கருத்தெல்லாம் சொல்வதற்கில்லையென கூறுகிறாள். வேறு வழியின்றி வசுமதி கோமதிக்கு பேச்சு சுதந்திரம் தர, அதற்காகவே காத்திருந்தது போல கோமதி தன் மனதில் பட்டதையெல்லாம் படவென கூறி வசுமதியை மேலும் வெறுப்பேற்றுகிறாள்.

பேச வேண்டியதை பேசிவிட்டு உமா புறப்படுகிறாள். அசோக்கிடம் மட்டும் சொல்லிக் கொண்டு போகும் அவள் வசுமதியை கண்டு கொள்ளாமல் போகிறாள். அது வேறு வசுமதிக்கு கடுப்பை உருவாக்குகிறது. அசோக்கிடம் அவன் உமாவை திருமணம் செய்யும் விருப்பத்தில் உள்ளானா என கேட்க, அவன் எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு, அந்த கர்ம விதிப்பயனும் பாக்கி இருந்தால் அதுவும் நடக்கட்டுமே எனக் கூற வசுமதி இன்னும் குழம்புகிறாள். அவன் என்ன கூறுகிறான் என கோமதி மாமியிடம் கேட்க, அவள் தன் பங்குக்கு, “அதான் சொன்னானே, கர்மா, விதி, பயன் அப்படீன்னு. யாருக்கு புரியறது” என நொடித்து விட்டு போகிறாள்.

நீலகண்டன் வீட்டுக்கு சாம்பு சாஸ்திரிகள் வருகிறார். தன் தங்கை காசிக்கு போய் கங்கை சொம்பு கொண்டு வந்ததாகவும், அதை தனது நாத்தனார் வீட்டில் கொண்டு தருமாறு தன்னைக் கேட்டுக் கொண்டதால், தான் அந்தப் பக்கம் வந்ததாகவும், இவர்களையும் அப்படியே பார்க்க வந்தாகக் கூறுகிறார். தஙளாத்துக்கும் ஒரு சொம்பு கொண்டு வந்திருக்கலாகாதா, தாங்களும் சிறிது கங்கை ஜலத்தை தங்கள் மேல் தெளித்து கொண்டிருக்கலாமே என ஆதங்கப்படுகிறாள் பர்வதம். அதனால் என்ன ஆகப்போகிறது என நீலகண்டன் இடக்காக கேட்க, கங்காஜலத்தின் பெருமைகள் பற்றி சாம்பு சாஸ்திரி ஒரு கிளாஸே எடுக்கிறார். நீலகண்டன் சற்றும் எதிர்பாராவண்ணம் ஃபிசிக்ஸ் தியரிகள் பற்றி எல்லாம் பேசி, ஸ்டெப் பை ஸ்டெப்பாக நீலக்ண்டனை தான் சொல்வதற்கு ஒப்புதல் தெரிவிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விடுகிறார்.

திடீரென நீலகண்டன் பிள்ளையாரின் வாகனமாகிய இந்த சிறிய மூஞ்சூறு அவ்வளவு பெரிய பிள்ளையாரை துதிக்கையுடன் சேர்த்து எவ்வாறு செல்லும் என கேள்வியை எழுப்புகிறார். “அதானே” என ஆமோதிக்கிறார், சோவின் நண்பர். சோ அவர்கள் ஹிந்து மதத்தில் உருவகமாக பலவிஷயங்கள் குறிப்பிடப்படுவதை சுட்டுகிறார். இந்த வாகனங்களும் அப்படித்தான் என்கிறார். மூஞ்சூறு எதிரில் இருக்கும் எல்லாவற்றையும் வர்ஜா வர்ஜமில்லாமல் உண்ணும் இயல்புடையது. மனிதனின் புத்திக்கு அது உருவகமாக அமைகிறது. அந்த புத்தியை அடக்கி நல்வழிப்படுத்துபவர் விநாயகர், ஆகவே அது அவரது வாகனம். கர்வம் மிக்க பறவையான மயிலை முருகர் வைத்திருப்பது எல்லோரும் கர்வத்தை அடக்கிச் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவே.

இப்போது சாம்பு சாஸ்திரிகள் நீலகண்டனை ஒரு கேள்வி கேட்கிறார். கார் ரிப்பேரானால் ஜாக்கியை போட்டு தூக்குகிறோம் அல்லவா, அந்த சிறிய ஜாக்கி எப்படி அவ்வளவு பெரிய காரை தாங்குகிறது என கேட்க, நீலகண்டன் அது mechanism என்கிறார். அதே போல தான் சொல்வது occultism எனக் கூறி சாஸ்திரி சிக்சர் அடிக்கிறார். பர்வதத்தின் முகத்தில் புன்னகை.

பகுதி - 78 (22.05.2009):
நாதன் கோபமாக சாப்பிடாமல் அமர்ந்திருக்கிறார். வசுமதியிடம் அவள் உமாவிடம் நடந்து கொண்டது பற்றி தனது அதிருப்தியை தெரிவிக்கிறார். தான் உமாவுக்கு வாக்கு தந்தது பற்றி அவர் நினைவுபடுத்த, அது வெறும் வாய் வார்த்தையாகக் கூறப்பட்டதென்று என்று வசுமதி கூற, தன்னைப் பொருத்தவரை சொன்ன சொல்தான் முக்கியம் எனக் கூறிவிடுகிறார் நாதன்.

“ஆஃப்டர் ஆல் வெறும் வார்த்தைதானே” என நண்பரும் ஆமோதிக்க, சோ பேச ஆரம்பிக்கிறார். நல்லோர் அளிக்கும் வாக்கு வாய் வார்த்தையாக இருந்தாலும் கல்மேல் எழுதப்பட்டது போல. அதே சமயம் கீழோர் தரும் வாக்கு சபதமாகவே இருந்தாலும், எழுத்து ரூபத்தில் தரப்பட்டிருந்தாலும் அது நீர் மேல் எழுதியது போலவே எனக் கூறுகிறார். இதற்கு வேரியேஷனாக, “வாயால் ஆயிரம் வார்த்தை சொல்லிக் கொள், ஆனால் மறந்தும் அதை எழுத்தில் வைக்காதே” என்று பேசும் பெரியவர்களும் உண்டு. இந்த நாதன் வாய் வார்த்தையை மதிப்பவர், மேலும் அவர் நீலகண்டனுக்கு எழுதிய கடிதம் வேறு இருக்கிறது எனக்கூறி கலகலப்பு ஊட்டுகிறார் சோ.

வேறு வழியின்றி வசுமதி பணிந்து போக வேண்டிய நிர்ப்பந்தம். நீலகண்டனுக்கும் ஃபோன் செய்து தனது நடத்தைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறாள். நாதனுக்கே ஆச்சரியம், அவளது இந்த துரித மனமாற்றத்தைப் பார்த்து. அசோக் விரும்பினால் உமாவை அவனுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்னும் அளவுக்கு அவள் இறங்கி வந்து விடுகிறாள்.

வசுமதி வீட்டுக்கு வரும் அவள் சினேகிதி மைதிலி அசோக் உமா பற்றிய அவளது கவலைக்கு தூபம் போடுகிறாள். நேராகப் போய் பர்வதத்திடம் திருமணப் பேச்சை வசுமதி எடுக்க வேண்டும், பர்வதத்துக்கே இந்த சம்பந்தத்தில் இஷ்டம் இல்லாததால் வசுமதிக்கு ஏதும் அவள் கணவரிடம் கெட்டப் பெயர் வராத வண்ணம் பர்வதம் நீலகண்டனே மறுத்து விடுவார்கள் என ஒரு அபார யோசனை கூறுகிறாள். அப்படி பர்வதம் செய்யாவிட்டால் தான் தனது காதுகளை அறுத்து கொள்வதாகவும் சூளுரைக்கிறாள் அந்த மாது சிரோன்மணி. அவள் தன் காதுகளை அறுத்து கொள்வதால் எனக்கு என்ன லாபம் என வசுமதி அலுத்து கொண்டாலும் அந்த ஆலோசனையை செயல்படுத்த முடிவு செய்கிறாள்.

“இதென்ன சார், நல்ல பெண் கைகேயியை மனம் மாற்றிய கூனி போல இந்தப் பெண்மணி செயல்படுகிறாள்” என நண்பர் அலுத்துக் கொள்ள, கைகேயி அப்படியெல்லாம் பலர் கூறுவது போல நல்ல பெண்மணி இல்லை என்பதை சோ அவர்கள் நிறுவுகிறார். அவளுக்கே அடிமனதில் ராமர் பட்டாபிஷேகம் பற்றிய பயங்கள் இருந்திருக்கின்றன, கூனி பேசியதால் அவை குபீரென தூண்டப்பட்டன, அவ்வளவே என கூறும் சோ, இங்கும் வசுமதிக்கு ஏற்கனவே இருந்த அந்தஸ்து மோகம் மைதிலியால் தூண்டப்பட்டது அவ்வளவே எனக் கூறுகிறார்.

தன் வீட்டுக்கு திடீரென வந்த வசுமதியை வரவேற்கிறாள் பர்வதம். “என்ன விஷயமா வந்திருக்கே, எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லு, ரெண்டே வார்த்தைகளில் சொல்லு” என அவள் கூற, வசுமதி “சரி சம்பந்தி” என பதிலளிக்கிறாள். பர்வதம் திக்குமுக்காடிப் போகிறாள். இப்போது வசுமதி அசோக் உமா சம்பந்தத்தின் அனுகூலம் பற்றி பாயிண்டுகளை அடுக்குகிறாள். அதாகப்பட்டது: உமாவும் விரும்புகிறாள். அசோக்குக்கு பைத்தியம் குணமாகும்னு தோணலை, இருந்தாலும் உமாவை அவனூக்கு கல்யாணம் செஞ்சுவச்சு முயற்சிக்கலாம். உமா மாதிரி ஒரு பெண் அசோக்குக்காக தியாகம் செய்வது பாராட்டத்தக்கது, and so on.

பர்வதம் தன் பங்குக்கு தன் கணவர் நீலகண்டனை கலந்து பேசித்தான் முடிவு செய்ய இயலும் எனக்கூறி அவளை வழியனுப்புகிறாள். நீலகண்டன் கேரளா டூர் முடிந்து வரும் போது அவள் இப்பிரச்சினையை கணவன் முன்னால் வைக்கிறாள். தனக்கும் இந்த சம்பந்தத்தில் இஷ்டமில்லை என அவர் கூற, பர்வதம் நிம்மதியடைகிறாள். இப்போதே போய் நாதன் வீட்டில் இந்த சம்பந்தம் சரிப்படாது எனக் கூறிவிட்டு வருவதாக நீலகண்டன் புறப்பட, உமா வந்து அவரைத் தடுக்கிறாள். தான் மேஜர், ஆகவே தனது திருமணம் தன் விருப்பப்படியே அமையும் எனக்கூறுகிறாள் அவள். அப்படியே அசோக்குக்கு அவளை திருமணம் செய்து வைக்காவிடில் தான் திருமணமே செய்யப் போவதில்லை எனவும் உறுதியாகக் கூறுகிறாள்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது