5/21/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் - 75 & 76

பகுதி - 75 (19.05.2009):
வேம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு கிரியின் தாத்தா கணேசன் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ஜயந்தி-கிரி திருமணப் பேச்சை மறுபடி பேச வந்திருப்பதாகக் கூறுகிறார். உள்ளேயிருந்து சுப்புலட்சுமி “அதெல்லாம் முடிந்துபோன கதை” எனச் சீற, கணேசனும் விடாப்பிடியாக தனது தரப்புக்கு ஆதாரமான விஷயங்களை அடுக்குகிறார். அதனாலெல்லாம் அசராத சுப்பு தன் பங்குக்கு பாயிண்டுகளை வீசுகிறாள். கடைசியில் கணேசன், “குரல் மட்டும் கேட்கிறது, ஆனால் நேரில் பார்க்க இயலவில்லை” எனக் கூறியதும் வெளியே வருகிறாள், கணேசனைப் பார்த்து அப்படியே திகைத்து நிற்கிறாள்.

“நமஸ்காரம், நீங்களா மாமா” என ஆச்சரியமாக கேட்கிறாள். முதலில் திகைக்கும் கணேசனும் எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறது என்றும் ஆனால் சட்டென அடையாளம் தெரியவில்லை என தயக்கத்துடன் சொல்ல, சுப்புலட்சுமி தான் தூத்துக்குடியில் அவரது வீட்டில் சமையல் வேலை செய்து வந்த லட்சுமியின் பெண் என தன்னை சந்தோஷமாக அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். கணேசன் அக்காலகட்டத்தில் தங்கள் குடும்பத்தினருக்கு செய்த உதவிகள், தன் தந்தையாகிய சாஸ்திரிகளை மிக கௌரவமாக நடத்தியதில் இருந்த பெருந்தன்மை ஆகியவற்றை தொண்டையடைக்கும் நெகிழ்ச்சியுடன் தன் கணவரிடம் பட்டியலிடுகிறாள். கணேசனும் தனது பழைய நினைவுகள் வந்த நிலையில் சுப்புவை இது பற்றியெல்லாம் இப்போது பேச வேண்டாமே என கூச்சத்துடன் தடுக்கிறார். சுப்புலட்சுமியோ கேட்பதாக இல்லை. அவளை சற்றே திசை திருப்பும் நோக்கத்தில் அவளது அன்னை, அண்ணா, தங்கைகள் எல்லோரையும் பற்றி விசாரிக்க, அவளும் அவர்கள் பற்றிய விவரங்களை கணேசனிடம் இற்றைப்படுத்துகிறாள். இதையெல்லாம் கேட்கும் வேம்பு சாஸ்திரிக்கோ மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம். சுப்பு மேலே பேசுகிறாள். கிரிதான் கணேச மாமாவின் பேரன் என்று தெரிந்த இந்த நிலையில், தன் மகள் ஜெயந்தி அவனுக்குத்தான் என திட்டவட்டமாக தெரிவிக்கிறாள்.

இப்போது தயங்குவது கணேசனின் முறை. வேண்டாமே என அவர் கூற, தன் மகள் ஜெயந்தி அவர் வீட்டு சமையற்காரியின் பேத்தி என்பதால் கணேசன் தயங்குகிறாரா என அவள் ஆதங்கத்துடன் கேட்க, அப்படியெல்லாமில்லை என திட்டவட்டமாக கணேசன் மறுக்கிறார். தான் அந்த வீட்டுக்கு வரும்போது எப்படியாவது இக்கல்யாணத்தை முடிக்கும் மனநிலையில் வந்ததாகவும், ஆனால் இக்கல்யாண விஷயத்தில் பல மனநெருடல்கள் வைத்திருந்த சுப்புலட்சுமி, இப்போது தனக்கு கடன்பட்டதாக நினைத்து தனது நிலையிலிருந்து கீழிறங்கி வர வேண்டாமே என்பதுதான் அவரது தயக்கத்துக்கு காரணம் என அவர் கூற, சுப்பு இப்போது தனது சம்மதம் மனப்பூர்வமானதே என திட்டவட்டமாகக் கூறி அவரை வேம்புவின் அருகில் உட்காரச் சொல்லி, அவருக்காக காப்பி தயாரிக்க செல்கிறாள்.

டோண்டு ராகவனின் சில வார்த்தைகள் இங்கே. தான் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ள கணேசனைப் பார்த்ததுமே சுப்புவின் மனநெருடல்கள் நொடியில் காணாமல் போய் அவள் திருமணத்துக்கு மனப்பூர்வமாக சம்மதித்த நிலையில் கணேசன் மிகப்பெருந்தன்மையுடன் அவளிடம் வெறுமனே நன்றிக்கடனுக்காக அவள் சம்மதத்தைப் பெறுவதில் தனக்கு இருக்கும் மனத்தடையை நாசுக்காக வெளிப்படுத்துவது ஆகிய இரு விஷயங்களுமே சீரியலின் இப்பகுதியின் மகுடம் எனக் கூறலாம். இரு பாத்திரங்களுமே போட்டி போட்டுக் கொண்டு தத்தம் பங்களிப்பை தந்தனர். வேம்பு சாஸ்திரிகளோ மௌன சாட்சியாக நின்று, தன் முகபாவத்திலேயே அத்தனை எதிர்வினையையும் காட்டியது அந்த நடிகரின் திறமைக்கு அத்தாட்சி.

நாதனின் வீட்டில் வசுமதியின் கிளப் தோழி மைதிலி வந்திருக்கிறாள். பல நாட்களுக்கான வம்பையெல்லாம் பேசிய திருப்தியில் மைதிலி கிளம்பத் தயாராக இருக்கும் நேரத்தில் அசோக்கை தேடி உமா வருகிறாள். உமா அங்கு வருவதன் பின்னணியை தூண்டித் துருவி விசாரிக்கும் மைதிலி வசுமதியிடம் அவள் ஜாக்கிரதையாக இல்லையென்றால் அந்த சின்னப் பெண் அசோக்கை தன் வசப்படுத்துவாள் என எச்சரிக்கிறாள்.

சாம்பு வீட்டில் அவர் தன் மனைவி செல்லம்மாவிடம் நாதன் வீட்டில் மைதிலி மாமி வந்து குழப்பம் செய்து விட்டு போன சமாச்சாரத்தை கூறுகிறார். செல்லமாவோ சாம்பு அந்த வீட்டிற்கு பூஜைதானே செய்யப் போனார், இந்த வம்பையெல்லாம் ஏன் கேட்கிறார் என கேட்க, அவர் நாதன் வீட்டு பெண்டுகள் உரக்கவே எல்லா விஷயங்களையும் பேசுவதால் தான் விரும்பாமலேயே அவை தன் காதில் விழுகின்றன என கூறுகிறார்.

அச்சமயம் செல்லம்மாவின் தோழி ஸ்ரீமதி அங்கு வர அவளிடம் அவள் பெண் கல்யாணத்தில் நடந்த சலசலப்புக்கு காரணம் கேட்கிறாள். தனது பெண்ணுக்கு ஏற்கனவேயே வேறிடத்தில் நிச்சயம் ஆகி, பிள்ளையாத்துக்காரர்கள் திடீரென அதிக வரதட்சணை கேட்டதால் அந்த சம்பந்தம் நின்று போனதை மாப்பிள்ளை வீட்டாருக்கு இவர்கள் சொல்லாமல் மறைத்ததையும், பிறகு வேறு யாரோ பிள்ளை வீட்டாரிடம் இது பற்றிப் போட்டுக் கொடுக்க, சற்றே பிரச்சினை எழுந்ததாகவும், தான் அவர்கலுக்கு விவரமாக எடுத்து சொன்ன பிறகு பிள்ளைவீட்டார் சமாதானமானதையும் கூறி, இம்மாதிரி விஷயங்களை மறைத்தது தவறாகப் போய் விட்டது என அங்கலாய்த்து விட்டு செல்கிறாள். சாம்புவும் இம்மாதிரி விஷயங்களை மறைப்பது உசிதம் இல்லை என அபிப்பிராயப்படுகிறார்.

“ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் முடிக்கலாம்” என கூறப்படுவதை சோவின் நண்பர் எடுத்துரைக்க, சோ அவரிடம் அது வெறுமனே ஒரு expediency ஆக கூறப்படுகிறதே அன்றி அது சரியல்ல என அபிப்பிராயப்படுகிறார். நல்ல பெயர் பெற பெறும் அவதியாக இருக்கும் அதே சமயம், அந்த நல்ல பெயர் ஒரே நொடியில் கீழிறங்கி போவதும் நடக்கிறது என்று கூறுகிறார். எப்படியுமே தெரியப்போகும் விஷயங்களை தேவையின்றி மறைத்தால் எப்போதுமே தொல்லைதான் எனவும் கூறுகிறார். மேலும் சத்தியம் தேவைதான் ஆனால் அது அதே சமயம் மனதை புண்படுத்துவதாக இருக்கலாகாது என்பதை சில உதாரணங்களுடன் விளக்குகிறார். இன்னும் உள்ளே போனால், மனதுக்கு இதம் என்பதற்காக அசத்தியத்தை கூறுவதும் தவறுதான் என்றும் கூறுகிறார்.

நாதன் வீட்டில் வசுமதி மட்டும் இருக்கிறாள். அசோக்கைப் பார்க்க உமா வருகிறாள். வசுமதி அவளிடம் தனியாகப் பேச வேண்டும் எனக்க்கூறி அவள் அங்கு வருவதையும், அசோக்குடன் பழகுவதையும் தான் விரும்பவில்லை என்பதை ஒரு புதிய முறையில் கூறுகிறாள்.

தான் சொல்லப்போவது அவள் மனதை காயப்படுத்துவதாக இருக்கக்கூடாது என நினைப்பதால் தான் இப்போது கூறப்போவதையெல்லாம் உமா எதிர்மறை அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனக்கூறி, பேச ஆரம்பிக்கிறாள்.

“நீ வருவது எனக்கு பிடிச்சிருக்கு ..., உன்னை எனக்கு பிடிச்சிருக்கு ..., அசோக்குடன் நீ தினமும் பேசுவது எனக்கு பிடிச்சிருக்கு ..., அசோக்குக்கு நீ நல்ல மனைவியாக இருப்பாய் ..., உனக்கு அசோக்கை விட்டால் வேறு மாப்பிள்ளை கிடைக்காது ..., உன்னை என் மருமகளாக்கிக் கொண்டால் எனது அந்தஸ்து மிக உயரும்..., உடனே உள்ளே வா”

உமா ஒன்றுமே பேசாமல் வீட்டை விட்டு வெளியே செல்கிறாள்.


பகுதி - 76:
நீலகண்டன் வீட்டில் அவர் பர்வதத்திடம் ஏதேனும் நியூஸ் உண்டா என கேட்க, அவள் உமாவிடம் பேசும்படி கூற நீலகண்டனும் பர்வதத்துடன் மாடியில் உமா இருக்குமிடத்துக்கு செல்கிறார். அங்கு உமா ஒரு கொந்தளிக்கும் எரிமலை போல அமர்ந்திருக்கிறாள். நீலகண்டன் அவளிடம் என்ன விஷயம் என கேட்க அப்படியே பொங்குகிறாள். நீலகண்டனிடம் வசுமதி தன்னிடம் நடந்து கொண்டதை சொல்லி கோபப்படுகிறாள். நீலகண்டன் அவளை சில பொதுவான வார்த்தைகளால் சமாதானப்படுத்துகிறார். நாதன் இது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், அவருக்கு தெரியாமல் வசுமதி விஷம வேலை செய்கிறாள் என்பது அவருக்கு தெரிய வேண்டும் என உமா கொதிப்புடன் பேச, அது தங்களது வேலையில்லை என நீலகண்டன் அவளை தடுக்கிறார். “நீங்கள் சொல்லித்தான் நான் அங்கு போனேன், அவர்கள் சொல்லித்தான் அசோக்குடன் பழகினேன். இந்த அவமானம் வந்தது. இனிமேல் நாதன் வந்து என்ன மாதிரி கெஞ்சினாலும் என்னை அங்கே மறுபடி போகச் சொல்லக்கூடாது” என இப்போது உமா கண்டிப்பாகவே கூறுகிறாள். அவரும் ஒத்து கொள்கிறார். நீலகண்டனும் பர்வதமும் கீழே செல்கின்றனர். பிறகு பர்வதம் சொல்லி மீண்டும் மேலே செல்லும் நீலகண்டன் உமாவை தேற்றும் வேலையைத் தொடருகிறார்.

திடீரென ஒரு ஆவேசத்தில் உமா நீலகண்டனின் செல்ஃபோனை பிடுங்கி, வசுமதியிடம் தன் கோபத்தை வெளிப்படையாகவே காட்டுகிறாள். பதறிப் போன நீலகண்டன் அவளிடமிருந்த தனது செல்ஃபோனை திரும்ப பிடுங்கி வசுமதியிடம் மன்னிப்பு கேட்க முயல, உமா தான் வசுமதியிடம் பேசியது டயல் செய்யாத ஃபோனை வைத்துதான் எனவும் ஆகவே தனது மதிப்பு நாதன் வீட்டில் போய்விட்டதோ என நீலகண்டன் பதற வேண்டாம் என கூற, அவருக்கும் நிம்மதி. தந்தை மகளை தேற்றும் காட்சி மேலும் தொடர்கிறது.

சாம்பு வீட்டில் வேம்பு சாஸ்திரியின் மனைவி சுப்புலட்சுமி சாம்பு சாஸ்திரி மனைவி செல்லமா விடம் தனது கருத்துக்களை கூறுகிறாள். முதலில் கிரிக்கு தன் பெண்ணை எந்தெந்த காரணங்களுக்காக தர யோசித்தாளோ அவை அனைத்துமே அவன் கணேசமாமாவின் மகன் என தெரிந்ததும் பஞ்சாய் பறந்து விட்டன என்கிறாள். செல்லம்மா அவள் சொன்னதை ஆமோதிக்கிறாள். கணேசனிடம் தனக்கு இருக்கும் நன்றியுணர்ச்சியை அவள் மீண்டும் தெளிவாக்குகிறாள். இருப்பினும் தனது உறவினர்கள் மத்தியில் இந்த சம்பந்தத்தால் என்னென்ன எதிர்வினைகள் வருமோ என அவள் தனது பயத்தை வெளிப்படுத்துகிறாள். சுப்பு தைரியமாக எடுத்த முடிவு தன்னால் கூட சாத்தியமாக இருந்திராது என வெளிப்படையாகவே கூறும் செல்லம்மா, அவளுக்கு தைரியம் தரும் வார்த்தைகளை கூறுகிறாள். இருவரது நட்பும் இந்த நிகழ்ச்சியால் பலப்படுகிறது.

அசோக் கோமதி மாமியிடம் உமா ஏன் இப்போதெல்லாம் இப்பக்கம் வருவதில்லை என கேட்க, முதலில் தயங்கும் கோமதி மாமி அசோக் வற்புறுத்துவதால் உள்ளதைக் கூறிவிடுகிறாள். அசோக் தன் தாயாரிடம் அவள் உமாவிடம் இவ்வாறு ஏன் மரியாதைக் குறைவாய் பேசினாள் என கேட்கிறான். இதை அவனுக்கு யார் சொன்னது என வசுமதி கேட்க, சமையற்கார மாமிதான் கூறியதாக வெள்ளந்தியாக கூறிவிட உள்ளே கோமதி மாமிக்கு தூக்கிவாரிப் போடுகிறது. உமா பற்றி வசுமதி கூறியது எல்லாவற்றையும் புறம் தள்ளுகிறான் அசோக். அவள் அவன் மேல் சுயநலத்துடனேயே அன்பு காட்டுகிறாள் என வசுமதி கூற, அவள் வழியில் அவள் அன்பு காட்டுகிறாள், அதில் வசுமதிக்கு என்னக் கஷ்டம் என கேட்டுவிட்டு, ஒருவரை வீட்டுக்கு வராதே என எப்படி அவள் கூறப்போயிற்று என்பதை சாதாரண குரலிலேயே கேட்கிறான். தான் உமாவைப் போய் பார்க்கப் போவதாக அவன் கூறுகிறான். அப்படியெல்லாம் அவாத்துக்கு போய் அவன் தனது மதிப்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என வசுமதிசொல்ல, நாம் எல்லோருமே பரப்பிரும்மத்திலிருந்தே வந்துள்ளோம். அந்த பரப்பிரும்மம் அதிலிருந்து சில பகுதி எடுக்கப்படுவதால் குறைவதில்லை, அதே போல அத்துடன் எதையாவது சேர்ப்பதால் அது அதிகமாவதும் இல்லை என அவன் கூறுகிறான்.

அதென்ன பரப்பிரும்மம், எடுத்தாலும் குறையாது, சேர்த்தாலும் அதிகரிக்காது என கூறப்படுகிறது என்று சோவின் நண்பர் கேள்வி எழுப்புகிறார். சோ வழக்கமான புன்முறுவலுடன் விளக்குகிறார். ஈசாவாஸ்ய உபநிஷத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இறைவன் முழுமையானவன். அவனிடமிருந்து உருவாவது முழுமையான உலகம். அவ்வாறு உருவானாலும் இறைவன் முழுமையாகவே இருக்கிறான். என்ன பொருள்? உலகம் என்பது மாயை. ஆகவே அது எடுக்கப்பட்டாலும் இறைவன் அதே முழுமையாகவே இருக்கிறான். இதையெல்லாம் நாம் உணர்ந்துதான் அறிய வேண்டும், சொல்லிக் கொடுத்தோ, படித்தோ வராது எனவும் சோ கூறுகிறார். நாம் எல்லாம் பரப்பிரும்மத்தை சேர்ந்தவர்கள். இதைத்தான், தத்வமசி, அகம் பிரும்மாஸ்மி என்றெல்லாம் கூறுகிறார்கள் எனவும் சோ கூறுகிறார். மேலும் கூறுகிறார், கண்டறியும் அனுபவமே இறைவன் என. இதை கவியரசு கண்ணதாசன் மிக அழகாக கவிதையாக இவ்வாறு கூறுகிறார் என்பதையும் எடுத்துரைக்கிறார். வரிகளை கூகளிட்டு பார்த்தில் எனக்கு காதலாகி என்னும் வலைப்பூ கிடைத்தது. அப்பதிவருக்கு என் நன்றி.

பிறப்பெனில் யாதென கேட்டேன் பிறந்து பார் என இறைவன் பணித்தான்
இறப்பெனில் யாதென கேட்டேன் இறந்து பார் என இறைவன் பணித்தான்
வாழ்வெனில் யாதென கேட்டேன் வாழ்ந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்து அறிவதுதான் வாழ்வெனில் ஆண்டவன் நீ எதற்கு என்றேன்
ஆண்டவன் அருகில் வந்து அனுபவமே நான்தான் என்றான்


இப்போது அசோக் அவ்விடத்தை விட்டு அகலுகிறான். சமையற்கார மாமி வசுமதியிடம் நல்ல டோஸ் வாங்குகிறாள்.

உமா வீட்டுக்கு வருகிறான் அசோக். பர்வதத்திடம் உமாவிடம் பேச அனுமதி கேட்கிறான். அவள் அனுமதி மறுக்கிறாள். அதை ஏற்று அவன் அப்பால் செல்கிறான். தெருவில் செல்லும் அவனை மாடியில் இருந்து பார்க்கும் உமா அவனை உள்ளே அழைக்கிறாள். நடந்தது முழுமையாக தனக்கு தெரியாதென்றாலும் தன் அன்னை அவளை மனம் புண்பட பேசியதை தன்னால் ஊகிக்க முடிகிறது எனக் கூறுகிறான். “இண்டீசண்ட்” என ஒரு வார்த்தையில் தன் கருத்தை உமா வெளிப்படுத்த, அவள் தன்னுடம் நெருக்கமாக பழகுவதை கூட தன் அன்னை இண்டீசண்ட் ஆக நினைத்திருக்கலாம் அல்லவா என அசோக் கேட்கிறான். அட்டாச்மெண்ட் கூடாது என்றெல்லாம் பேசும் அசோக் இப்போது தன் அன்னை சம்பந்தப்பட்ட விஷயம் என்று வரும்போது மட்டும் இவ்வாறெல்லாம் விளக்கம் ஏன் கூற வேண்டும் என உமா தன் பங்குக்கு கேட்கிறாள். உமா மேலே பேசுகிறாள்.

அசோக் நார்மல் இல்லை என அவன் குடும்பத்தினர் தீர்மானித்ததாகவும், ஆகவே அவனை உலக வாழ்க்கைக்கு திருப்ப உமா தனது சாதுர்யத்தைப் பயன்படுத்த வேண்டும் என அவர்களே தன்னை கேட்டுக் கொண்டதாகவும், அதற்காக என்ன விலையானாலும் தான் தருவதாக நாதன் கூற அசோக்குடன் தனக்கு திருமணம் நடக்க வேண்டும் என தான் கேட்டதாகவும், நாதன் அவ்வாறே வாக்குறுதி தந்ததாகவும் கூறுகிறாள். ஆனால் இவ்வாறு தான் கேட்டதுமே வசுமதி மாமியின் முகத்தில் ஈயாடவில்லை எனவும், ஆகவே முதலிலிருந்தே தன் எதிர்ப்பைக் காட்டியதாகவும் அவள் கூறுகிறாள். எல்லோருடைய சம்மதத்தையும் பெற்றுத்தான் காதல் வரவேண்டும் என்பதில்லை தான் கருத்து கொண்டிருந்ததால் வசுமதியின் எதிர்ப்பைத் தான் பொருட்படுத்தவில்லை என்றும், அதனால் தன் மேல் இன்னும் அதிகமாக வசுமதி எரிச்சல் கொண்டாள் எனவும், அந்த தினம் தன்னிடம் கடுமையாக அவள் பேசினது அதன் வெளிப்பாடே எனவும் உமா கூறுகிறாள்.

அசோக் நிதானமாக புன்முறுவல் செய்கிறான். விஸ்வாமித்திரர் மனதை மாற்ற மேனகையை அனுப்பியதுபோல அவளை தன்னிடம் அனுப்பினார்களா என கேட்கிறான்.

இப்பகுதியில் வரும் எல்லா காட்சிகளுமே அருமை.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது