5/14/2009

எங்கே பிராமணன் - பகுதி - 71

பகுதி - 71 (13.05.2009):
நாதன் வீட்டில் சாம்பு சாஸ்திரிகள் பூஜை முடிந்து கற்பூரத் தட்டை வெளியில் எடுத்து வருகிறார். அசோக்கிடம் அவர் டாக்டர் ஹம்சா ஹாஸ்பிடலில் நடந்த விஷயங்களை நாதன் தன்னிடம் சொன்னதை கூறி தனக்கும் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது என்கிறார். ஓர் உயர்ந்த பிரக்ஞை நிலைலையில் இருந்து பார்த்தால் இது புரியும் என்று கூறும் அசோக், தூரத்தில் வரும் காரை வீதியிலிருந்து பார்ப்பதை தவிர்த்து மாடிமேல் நின்று பார்த்தால் அதை இன்னமும் முதலிலேயே உணர்ந்தறிய முடியும் என்கிறான். இவ்வளவு அருமையான விஷயத்தை இவ்வளவு எளிமையாக அவன் கூறியதை அவர் பாராட்டுகிறார்.

டாக்டர் இஞ்செக்‌ஷனை கையில் எடுக்கும் வரை தனக்கு தான் பேசப்போவது தெரியாது என்ற அசோக், திடீரென ஒரு ஆவேசமான சக்தி தன்னுள் புகுந்ததாகவும், டாக்டரிடம் என்னென்னவோ கூறவைத்ததாகவும் கூறவைத்ததாகவும், கூறிய பிறகு அந்த ஆவேசம் தானே தன்னை விட்டு அகன்றதாகவும் அசோக் கூறினான். டாக்டரும் தான் சொன்ன நிகழ்ச்சியை அப்படியே ஒத்துக் கொண்டதாகவும் கூறுகிறான்.

ஏதோ ஒரு சக்தி தன்னை ஆட்டிப் படைப்பதாகவும், தான் அதன் ஒரு கருவியாக மட்டுமே உணர்வதாகவும் அவன் கூறினான். அதே சக்திதான் அவனை எல்லா கெடுதல்களிலிருந்தும் அவனை காப்பதாக சாம்பு கூறுகிறார். தான் எதையோ கண்டறியவே இங்கு வந்திருப்பதாக அசோக் தான் உணர்ந்ததை கூறுகிறான். மருந்து மாயம் என்பதிலிருந்து இனி விடுதலை, இனிமே தன்னை டாக்டரிடம் அழைத்துப் போக ரொம்பவே யோசிப்பார்கள் என அசோக் கூறுகிறான்.

தன்னை வேகமாக அந்த சக்தி அழைத்துச் செல்ல முயன்றாலும், தன்னால் தனது வேகத்தில் மட்டுமே செல்ல முடியும் எனவும் கூறுகிறான். அரவிந்தரின் சாவித்திரியில் வரும் “ஊர் உறங்குகிறது, மனிதர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள், தெய்வீகம் உள்ளே சுரந்திண்டு இருக்கு (Gods shall grow up, while wise men talk and sleep) என்னும் வரிகளை மேற்கோளாக கூறிவிட்டு அசோக் செல்கிறான்.

சாம்பு சாஸ்திரிகள் கையில் இருக்கும் கற்பூரத் தட்டை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளும் நாதன், சாம்பு சாஸ்திரிகள் தங்களாத்துக்கு வந்து பூஜை செய்வது மனதுக்கு நிறைவாக இருக்கிறது என கூறுகிறார். “எல்லாம் உங்களை போன்றவர்களது தயவுதான்” என சாம்பு கூறிவிட்டு, வசுமதி இருக்கும் இடத்துக்கு செல்கிறார். வசுமதி அவ்ரிடம், “எப்படி இருக்கிறான் உங்கள் சிஷ்யகோடி” என கேட்க, அவரோ “அவர் சிஷ்யகோடி எல்லாம் இல்லை, அவர் ஒரு புண்ணிய கோடி” என்கிறார். அசோக் சுயம்பு, குருவே தேவையில்லை, அவன் ஸ்வயமாச்சாரியன்” என சாம்பு கூறுகிறார்.

சோவின் நண்பர் ஸ்வயமாச்சாரியன் என்றால் என்ன என கேட்க, சோ “நாதனும் அவர் குடும்பத்தினரும் ஸ்மார்த்தர்கள். ஸ்வயமாச்சாரியன் என்பது வைணவ கான்சப்ட். அவர்களுக்கு பொருந்தாது எனக்கூறிவிட்டு, ஸ்வயமாச்சாரியன் என்றால் என்ன என்பதை விளக்குகிறார். அதாவது குருவின் தேவை இன்றி தாங்களே கற்றறியும் திறமை பெற்றவர்களே ஸ்வயமாச்சாரியர்கள்” என விளக்குகிறார்.

நாதன் மேலே தொடர்கிறார். அசோக்கை தன் இரண்டு டாக்டர்களிடம் கூட்டிச் சென்றதாகவும், அதில் ஒருவர் அசோக்கின் பேஷண்டாக மாறிவிட்டதாகவும், இன்னொருவர் பைத்தியம் பிடித்து பிராக்டீஸை விட்டதாகவும் அங்கலாய்க்கிறார். வசுமதியோ பையனுக்கு பிரச்சினை ஒன்றும் இல்லையெனவும், என்ன, உலகவாழ்வில் அவ்வளவு ருசி இல்லாதவனாக இருக்கிறான் என்றும், அதை உருவாக்கினால் எல்லாம் சரியாகிவிடும் என கூறுகிறாள். ஆக இவன் சன்னியாசியாகவும் இல்லை, நம்மைப்போலவும் இல்லை. இப்படி திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கிறான் என சலிப்புடன் கூறுகிறார்.

சோவின் நண்பர் திரிசங்கு சொர்க்கம் பற்றி சோவிடம் விளக்கம் கேட்க, அவர் ராமாயணத்தில் வரும் திரிசங்கு ராஜாவின் கதையை கூறுகிறார். தனது பூதவுடலுடன் சொர்க்கம் போக எண்ணிய திரிசங்கு என்னும் அரசன், அதை அடையும் முயற்சிக்கு யாரிடமிருந்தும் உதவி கிடைக்காததோடு, கூடவே விகார ரூபத்தையும் சாபமாக பெற்றான். அவனுக்கு விசுவாமித்திரர் உதவ யாகம் நடத்துகிறார். அவனை அப்படியே சொர்க்கத்துக்கு மேலே அனுப்ப, இந்திரனால் அவன் கீழே தள்ளப்பட, கோபம் கொண்ட விஸ்வாமித்திரர் அவனை ஆகாயத்திலேயே அந்தரத்தில் நிறுத்தி அவனை சுற்றி இன்னொரு சொர்க்கம் படைக்க ஆரம்பிக்கிறார். பயந்துபோன தேவர்கள் அவரிடம் வந்து மன்னிப்பு கேட்டு, அந்த சொர்க்க நிர்மாணம் ஆனவரை அப்படியே விட்டுவிட கெஞ்சுகிறார்கள். அந்த சொர்க்கம்தான் திரிசங்கு சொர்க்கம், அதாவது பூமியும் இல்லை, சொர்க்கமும் இல்லை.

சாம்பு வீட்டுக்கு போக விடைபெற, நாதன் அவருக்கு கார் லிஃப்ட் தருவதாக கூறுகிறார். வசுமதி சாமர்த்தியமாகப் பேசி அவரை வீட்டுக்கு நடந்தே போகும்படி செய்கிறாள். நாதன் வசுமதியிடம் கோபப்படுகிறார்.

கிரிக்கு சுலோக புத்தகங்கள் விற்கும் அந்த வயோத்திகரை கிரி தன் வீட்டுக்கு அழித்து செல்கிறான். அவரும் கிரியின் அன்னையும் ஒருவரை ஒருவர் பார்த்து திகைக்கின்றனர். அவர் கிரியின் அம்மாவின் தந்தை. கிரியின் தந்தையும் அங்கு வந்து தன் மாமனாரிடம் ஆசீர்வாதம் வாங்குகிறார். தான் முதலில் மகளது கலப்புத் திருமணத்தை ஒத்து கொள்ளாது இருந்ததற்கு அந்த வயோதிகர் மன்னிப்பு கேட்கிறார். மிகவும் பரிவுடன் பேசுகிறார் கிரியின் தந்தை. தங்களுடனேயே அவர் இருக்கவேண்டும் என அவரிடம் கிரியின் தந்தை கேட்டு கொள்கிறார். மன்னிப்பு கேட்டல், மன்னித்த்ல் ஆகிய இரு செயல்களுமே மிக உயர்ந்த தளத்தில் கையாளப்பட்டுள்ளன. துளிக்கூட மெலோட்ராமா இல்லாமல் அற்புதமாக சீன் எடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகாலம் பிரிந்தவர்கள் ஒன்று சேரும் இக்காட்சியை வீடியோவில் பார்ப்பதுதான் பொருத்தம். எனது எழுத்துகளுக்கு அந்த சக்தி இல்லை.

நீலகண்டன் வீட்டுக்கு வருகிறார். கேட்டருகில் பாகவதர் காத்திருக்கிறார். அசோக் ஒரு extraordinary மனிதன் என்பது இப்போதாவது நீலகண்டனுக்கு புரிகிறதா என பாகவதர் கேட்க, அவன் extraordinary ஆனாலும் சரி extraterrestrial ஆனாலும் சரி, தான் அது பற்றி பேசத் தயாரில்லை. தான் முட்டாள்களுடன் பேசுவதில்லை என பாகவதரை பார்த்து கூறி விட்டு உள்ளே போக, “ஆனா நான் பேசுவேனே” எனக்கூறிவிட்டு பாகவதர் பின்னாலேயே செல்கிறார். அழிச்சாடியமாக உள்ளே உட்கார்ந்து நீலகண்டன் இதுவரை அசோக்கை பைத்தியம்னு சொன்னதுக்கு மாறா அவனே அவருக்கு குருவாகப்போகிறான், நீலகண்டன் நாத்திகத்திலிருந்து ஆத்திகத்துக்கு மாறும் காலம் வரவிருக்கிறது எனக் கூறிவிட்டு, தன்னை மீறிய சக்திதான் தன்னை உள்ளே அழைத்து வந்து அவரை இவ்வாறு பேச வைத்ததாகக் கூறி விடை பெறுகிறார் பாகவதர்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது