5/30/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 30.05.2009

பழைய காலத்திலும் எய்ட்ஸ் இருந்ததா?
பன்றிக் காய்ச்சல் சம்பந்தமாக நடந்த கலந்துரையாடலில் ஒரு தருணத்தில் டாக்டர் ப்ரூனோ எய்ட்ஸ் வைரஸ் மிக பலவீனமான வைரஸ்களில் ஒன்று என்ற கருத்தை வெளியிட்டார். அவர் கூறவந்தது என்னவென்றால், இன்ஃப்ளுயென்ஸா வைரஸ்கள் பரவும் வேகம் எய்ட்ஸ் வைரஸ்கள் பரவும் வேகத்தை விட பல மடங்கு அதிகமே என்பதாகும். பலமான வைரஸ்களை/பாக்டீரியாக்களை நாளடைவில் அடக்க கற்றுக் கொண்ட மனிதன் இப்போது எய்ட்ஸ் வைரஸ்களால் பாதிக்கப் படுகிறான் என்றார். இதற்கு முன்னால் எய்ட்ஸ் வந்து ஒருவனை பீடிக்கும் முன்பாகவே அவன் வேறு பல நோய்களால் உயிரிழக்கும் வாய்ப்பு உண்டு என்றார்.

நான் உடனேயே ஒரு கேள்வி கேட்டேன். “அதாவது எய்ட்ஸ் பழங்காலத்திலேயே இருந்து வந்திருக்கிறதா”? என்று. அதற்கு இப்போதைய தகவல்களை வைத்து இதற்கு தெளிவான பதில் கூற முடியாது என ப்ரூனோ ஒத்து கொண்டார். அதே சமயம் பக்கவாத நோய் இருந்தது என்றும், சுந்தர சோழருக்கு இருந்தது அந்த நோய்தான் என்றும் கல்கியின் பொன்னியின் செல்வனில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.

அப்போது எனக்கு திருமந்திரத்தின் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. சரியாக முழுமையாக நினைவில் கொண்டு வர இயலாததால் அப்போது அங்கு அதை குறிப்பிடவில்லை. அப்பாடல் இதோ:

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.
[திருமந்திரம்:த1:யாக்கைநிலையாமை:பாடல்148]

"இப்பதான் வந்தாரு, நல்லா சாப்பிட்டுவிட்டு எல்லாத்துக்கிட்டேயும் நல்லா பேசிக்கிட்டிருந்தாரு, இலேசா நெஞ்சை வலிக்குதுன்னாரு - படுத்தாரு அப்படியே போய்ட்டாரு" என்று நாம் அடிக்கடி கேள்விப்படுகிற நிகழ்வைச் சொல்கிற பாடல் இது. இப்போதெல்லாம் இதை massive heart attack எனச் சொல்கிறோம்.

தொழுநோய் பற்றியோ கேட்கவே வேண்டாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்து வந்திருக்கிறது. ஐரோப்பாவின் இருண்ட காலத்தில் தொழு நோய் ஒருவருக்கு வந்தால் அவருக்கான நீத்தார் சடங்குகளை செய்து அவர்களை ஊருக்கு வெளியே கொண்டு விடுவார்கள். பிறகு அவர் தம் குடும்பத்தாருடன் சேர்ந்திருக்க இயலாது. Werner Bergengruen என்னும் ஜெர்மானிய எழுத்தாளர் தனது Am Himmel wie auf Erden என்னும் நாவலில் இம்மாதிரி ஒரு சடங்கை வர்ணித்திருப்பார். அதை படித்துவிட்டு பல நாட்கள் தூக்கம் தொலைத்தேன்.

தொழுநோயை மருத்துவர்கள் Hansen's disease என்னும் பெயரால் குறிப்பிடுகிறார்கள். இப்போது அதற்கு சிகிச்சை எல்லாம் நன்கு வரையறுக்கப்பட்டுவிட்டது. பூரண குணமும் கிடைக்கிறது. இருப்பினும் அதற்கு எதிராக மக்களின் அறியாமை பல இடங்களில் அப்படியே உள்ளது.

மச்சமச்சினியே:
ஸ்டார் படத்தில் வந்த மச்சமச்சினியே என்னும் பாடல் என் மனதை மிகவும் கவர்ந்தது பற்றி நான் ஏற்கனவேயே மச்சமச்சினியே என்னும் தலைப்பில் பதிவு போட்டுள்ளேன். அதில் அப்பாடலுக்கான சுட்டியையும் தந்திருந்தேன். அப்பாடலை ஹிந்தியிலும் கேட்டதாகவும் ஆனால் படத்தின் பெயர் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தேன். அந்த ஹிந்தி வெர்ஷன் வேறு எதையோ தேடும்போது எதேச்சையாக கிடைத்தது.

இப்போது இதே பாட்டை ஹிந்தியில் கேளுங்கள், ருத் ஆ கயீ ரே எனத் துவங்கும் பாடல் எர்த் 1947 என்னும் படத்தில். சும்மா சொல்லப்படாது. ஏ.ஆர். ரஹ்மான் பின்னி பெடலெடுத்து விட்டார். ஆமிர் கான் மற்றும் நந்திதா தாஸ் (அழகி) நன்றாக நடித்துள்ளனர். பாடல் முடிந்ததும் அதே பாடலை சற்றே நீண்ட வெர்ஷனிலும் கேட்கலாம். சிற்றருவி துள்ளி செல்லும் அதே எஃபக்ட் இங்கும் உள்ளது.

இதென்ன தொழுநோயை பற்றி ஃபீலிங்ஸோட எழுதி விட்டு இப்படி திரைப்பாடலை பற்றியும் அதே மூச்சில் எழுதுகிறீர்கள் என்பவர்களுக்கு நான் கூற விரும்புவது ஒன்றுதான். அதுதான் வாழ்க்கை. எல்லா உணர்வுகளுமே தேவை. அதுவும் இம்மாதிரி பாடல்கள் எனக்கு டானிக் மாதிரியாக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

Anonymous said...

:)

லக்கிலுக் said...

ஸ்டார் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையென்று அறிவித்தது பயங்கர மோசடி. அவர் இந்தியில் போட்ட ட்யூன்களுக்கு தமிழில் பாடலெழுதி படத்தில் இணைத்துவிட்டார்கள். படத்தின் பின்னணி இசையை தேவா சகோதரர்கள் செய்தார்கள்.

பதிவுக்கு இந்த பின்னூட்டம் சம்பந்தமில்லாததாக் இருந்தாலும் தகவல் என்ற அடிப்படையில் வெளியிடவும்.

dondu(#11168674346665545885) said...

@லக்கிலுக்
ஸ்டார் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசைஅமைத்ததாக நானும் கூறவில்லையே. நான் குறிப்பிட்டது , ருத் ஆ கயீ ரே எனத் துவங்கும் பாடலை கொண்டுள்ள எர்த் 1947 என்னும் ஹிந்தி படத்தைத்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

ஸ்டார் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் தான் இசை.

வேறு யாரும் அவரது பாடல்களை உல்டா செய்து போட்டுக்கொடுக்கவில்லை.

கூகிளில் தேடிப்பார்க்கவும்.

வஜ்ரா said...

சின்ன வயதில் கதை ஒன்று படித்த நினைவு. ஒரு வியாபாரி காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருப்பான். அப்போது பூசணிக்காய் வளர்ந்திருக்கும் கொடியைப் பார்ப்பான். சிறிது தொலைவில் ஒரு மிகப்பெரிய வேப்பமரம் ஒன்று இருக்கும். அதன் நிழலில் அமர்ந்து ஓய்வெடுக்கும் போது, எத்தனை ஒல்லியான பூசணிக்கொடிக்கு எவ்வளவு பெரிய பழமும் இவ்வளவு பெரிய வேப்ப மரத்திற்கு மிகச்சிறிய பழமும் படைத்த ஆண்டவன் முட்டாள் தான் என்று முடிவு செய்வான். பின்னர் அந்த வேப்ப மர நிழலில் படுத்துறங்கும் போது காற்றடித்து வேப்பம் பழம் ஒன்று அவன் தலையில் வந்து விழும்.

அப்போது தான் அவனுக்கு அறிவு வரும். பெரிய மதத்திற்கு பெரிய பழத்தைப் படைத்திருந்தால் இவன் கதி என்ன ஆகியிருக்கும் என்று !

அதே போல் தான் எய்ட்ஸ் வைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்சா வைரஸும்.

எய்ட்ஸ் வைரஸுக்கும் மட்டும் இன்ஃப்ளூயன்ஸா போல் தொற்றும் (பரவும்) தன்மையிருந்தால் நம் கதி என்னவாகியிருக்கும் ?

---

எய்ட்ஸ் வைரஸ் குரங்கிலிருந்து மனிதனுக்குப் பரவியது. அது பழங்காலத்தில் இருந்ததில்லை. 19-20ம் நூற்றாண்டில் தான் அது தோன்றிப் பரவ ஆரம்பித்திருக்கக்கூடும் என்று பலர் நம்புகிறார்கள்.
அதற்கான ஆதாரங்கள் தான் தற்போது உள்ளன.
அது எப்படி குரங்கிலிருந்து மனிதனுக்குப் பரவியது என்பதற்குப் பலர் பல கதைகள் சொல்கிறார்கள். ஒரு கிளுகிளுப்பான கதையில் அப்பிரிக்க பழங்குடியினர் குரங்கு ரத்தத்தை தம் மர்ம உருப்புகளில் தேய்த்துக் கொள்வதால் செக்ஸில் அதிக சுகம் ஏற்படுவதாக நம்பினதாகவும் அவர்களிடமிருந்து கிருமி பரவியிருக்கலாம் எனவும் கூறுகிறது.


நரம்பியல் சார்ந்த பக்கவாதம் முதியவர்களுக்கு வரும். இளம்பிள்ளை வாதம் என்பது வைரஸ் கிருமியால் வருவது. அது பண்டைக்காலம் தொட்டே இருந்து வந்துள்ளது. எகிப்து நாகரீகத்திற்கு இந்த வியாதி தெரிந்திருக்கிறது என்பதற்கான பட ஆதாரம் கூட கூகிளில் தேடினால் கிடைக்கும்.

--

தொழு நோய், காச நோய் இரண்டுமே மைகோபேக்டீரியா என்ற வகை நுண்கிருமியால் வருபவை. அவை வைரஸ் அல்ல. வைரஸ்கள் intracellular parasites அதாவது செல்லுக்குள் வாழும் ஒட்டுண்ணிகள், பொதுவாக பாக்டீரியாக்கள் அப்படி செல்லுக்குள் வாழாது. செல்லுக்கு வெளியில் தான் டேரா போட்டு பிரச்சனை செய்யும். ஆனால் வைரஸ்களைப் போல் தான் மைகொபேக்டீரியாவும் செல்லுக்குள் சென்று வாழும் என்பது ஒரு விந்தையான விசயம்.

வால்பையன் said...

ரகுமான் அனுமதியில்லாமல் அவ்வாறு செய்ய முடியாது!

”தோலி சஜாக்கே ரக்குனா” என்ற படத்தின் பாடல் மெட்டுகள் தான் ”ஜோடி” படத்திற்கு!

ஒரு பொய்யாவது சொல் கண்ணே பாடல் மட்டும் சபேஷ்-முரளி இசை!
பிண்ணனி இசையும் சபேஷ்-முரளி

ரகுமான் என்ற பெயருக்காவே பாடல் கேசட்டுகள் விற்பனையாகி கொண்டிருந்த காலத்தில் இது ஒன்னும் ஆச்சர்யம் தரும் விசயமில்லையே!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது