5/14/2009

டோண்டு பதில்கள் - 14.05.2009

எம்.கண்ணன்:
1. டெல்லியிலிருந்து அடிக்கடி சென்னை வரும் காங்கிரஸ் மற்றும் பாஜக பெருந்தலைகள் - குலாம் நபி ஆசாத், வயலார் ரவி, மொய்லி, வெங்கையா நாயுடு போன்றவர்கள் விமானத்தில் வருவதற்கான செலவும், விமான நிலையத்திலிருந்து சத்தியமூர்த்தி பவனோ, ஹோட்டலோ செல்ல/வர, மற்றும் தங்கும் / உணவு செலவுகள் - யார் பணம் கொடுக்கிறார்கள்? கட்சி நிதியா சொந்த பணமா? ஒரு முறை வந்து செல்வதற்கு சுமார் எவ்வளவு செலவாகும்?
பதில்: இதென்ன குழந்தை மாதிரி கேட்கிறீர்கள்? எல்லாமே கட்சிப் பணம்தான். நன்கொடைகள் எல்லாம் எதற்கு என நினைக்கிறீர்கள்?

2. சென்னையில் பலரும் குடிசை (kudisai) என்பதை Gudisai என்றே சொல்கின்றனரே ஏன் ? அதுமாதிரி பூரி (Poori) செட் என்பதை Boori set என்றும் பல இடங்களில் சொல்லப்படுகிறது.
பதில்: பல்லியை balli என்றுகூடத்தான் கூறுகின்றனர். மற்ற மொழிகளில் உள்ளது போல நான்கு க, ச, ட, த ஆகியவை தமிழில் இல்லை. காண்டெக்ஸ்டுக்கு ஏற்ப உச்சரிக்க வேண்டியதுதான். பொட்டு என்பதை பலர் bottu என்றும் கூறுகின்றனர்.

3. தற்போது பல நடுத்தர குடும்பங்களும் தங்கள் வீட்டு கழிப்பறைகளில் வெஸ்டர்ன் ஸ்டைல் கம்மோடு பொருத்துகிறார்களே? என்னதான் அது, வயதானவர்களுக்கும், மூட்டு/இடுப்பு வலி உள்ளவர்களுக்கு வசதியாக இருக்கும் என்றாலும், இண்டியன் ஸ்டைல் ஜான் எனப்படும் (ஒரிசா கம்மோடு) கழிப்பறைதான் சுகாதாரமானது இல்லையா? பொது இடங்களில் (பள்ளி, கல்லூரி, ஹாஸ்டல், அலுவலகம், தியேட்டர், பஸ்ஸ்டாண்ட், ஆசுபத்திரி) உள்ள வெஸ்டர்ன் ஸ்டைல் கம்மோடு உபயோகிப்பதும் ரிஸ்க்தானே?
பதில்: இக்கேள்வி என்னையும் பல காலமாக அலைகழிக்கிறது. வெஸ்டர்ன் வகை கம்மோடுகளுக்கு நல்ல பராமரிப்பு தேவை. சுத்தமாகவும் வைத்து கொள்ள வேண்டும். எது எப்படியானாலும் நம் உடல் பகுதியுடன் வரும் நேரடி காண்டாக்ட் மனதை கஷ்டப்படுத்துகிறது. பல இந்தியர்கள் வெஸ்டர்ன் டைப் டாய்லட்டில் மேலே ஏறி குந்திட்டு அமர்ந்து விபத்துகளுக்கு உள்ளாகின்றனர். நான் சில மாதங்களுக்கு முன்னால் செய்த ஒரு மொழிபெயர்ப்பில் அது சம்பந்தமான சில படங்களை கண்டேன். பயமுறுத்தும் படங்கள் அவை.

4. தவறான உறவுகள் பற்றிய அந்தரங்கக் கேள்விகளுக்கு ரம்யா கிருஷ்ணனும், உமா கிருஷ்ணனும் (த்ரிஷாவின் அம்மா) குமுதத்தில் பதிலளிக்கிறார்களே ? இவர்களுக்கு என்ன ஸ்பெஷாலிட்டி என இந்த மாதிரி கேள்விகளுக்கு பதிலளிக்க குமுதம் உபயோகப்படுத்திக் கொள்கிறது? தினமலர் வாரமலரில் அனுராதா ரமணனின் அந்தரங்கம் பதில் பகுதி படிப்பதுண்டா?
pathil: அவர்கள் celebrities என்பதைத் தவிர்த்து வேறு க்வாலிஃபிகேஷன் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. தினமலர் நான் படிப்பதில்லை.

5. அடுத்த வெளியுறவுத்துறை அமைச்சராக பிரகாஷ் கரத்தை 'த ஹிண்டு' ப்ரொஜக்ட் செய்வது போல தெரிகிறதே ? (கடந்த 2 நாள் - ஹிண்டு பேட்டிகள்) - கம்யூனிஸ்டுகளும் மத்தியில் அமைச்சரானால் நன்றாகத் தானே இருக்கும்?
பதில்: உள்துறை அமைச்சராக கூட ஒரு கம்யூனிஸ்டு செயல்பட்டிருக்கிறாரே? பெயர் மறந்து விட்டது. நன்கு செயல்பட்டால் என்ன ஆட்சேபணை இருக்கக் கூடும்?

6. சஞ்சய் காந்தியின் மகன் வருண் மீண்டும் கு.க கட்டாயமாக்கவேண்டும் என சொல்லியதாக செய்தி. தற்போதைய இந்தியாவில் இது சாத்தியமா? தேவையா?
பதில்: அப்படியா சொன்னார்? சொல்லியிருந்தால் அது நம் நாட்டுக்கு பிராக்டிகல் இல்லைதான்.

7. ப.சிதம்பரம் தோற்பார் என களத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பிரபலமான நிதி அப்புறம் உள்துறை அமைச்சர் ஏன் தன் தொகுதிப் பக்கம் எட்டிப்பார்க்காமல், வளர்ச்சிப் பணிகளை செய்யாமல் கோட்டை விட்டார்? அவர் மகன் கார்த்தி எப்போதுமே சிவகங்கையில் டெண்ட் அடித்து வேலை பார்ப்பவராயிற்றே ? சிதம்பரம் நினைத்திருந்தால் சிவகங்கைச் சீமைக்கு சில தொழிற்சாலைகளோ வேலை வாய்ப்புகளோ ஏற்படுத்தி அந்தப் பகுதியை முன்னேற்றியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?
பதில்: பல முன்னுக்குப்பின் முரணான செய்திகள் வருகின்றன. பல wishful thinking ஆக அமைகின்றன. No further comments from my side.

8. அடுத்த 15 தினங்களில் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனால் காங்கிரசுக்கு மந்திரி பதவி அளிப்பாரா? (மத்தியில் காங்கிரசுக்கு ஜெ.ஆதரவளிக்க - இங்கு திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு விலக்க, ஆட்சி கவிழ); அப்படி ஜெ.ஆட்சி வந்தால் மீண்டும் சசி சொந்தங்களின் உபத்திரவம் இருக்காது, ஜெ.யின் ஆணவ முடிவுகள் இருக்காது என்பதற்கு எந்த உத்திரவாதவும் இல்லாத நிலையில் ஜெ.ஆட்சிக்கு வருவது நல்லதல்லவே?
பதில்: கஷ்டம்தான். அப்படியே வந்தாலும் கூட்டணியாகத்தான் வரவியலும், பாமக மற்றும் காங்கிரசுக்கும் மந்திரி சபையில் இடம் தர வேண்டியிருக்கும். அது ஜெயாவின் ஸ்டைலுக்கு பொருந்தி வராது. ஆகவே நீங்கள் சொல்வது போல மத்தியில் நடந்தால், தமிழகத்துக்கு இடை தேர்தல் வேண்டுமானால் வந்திடலாம்.

9. எந்த ஆட்சி இருந்தாலும் பாமக மத்திய மந்திரிகள் சிறப்பாகவே பணிபுரிந்தார்கள் (ஏகே மூர்த்தி (ரயில்வே), அவரைவிட சிறப்பாக வேலு (ரயில்வே), அன்புமணி (சுகாதாரம்). அதற்குக் காரணம் மருத்துவர் ஐயாவின் பயிற்சியும் தலைமையும்தானே?
பதில்: மரியாதையாக ஒத்து கொள்ள வேண்டிய உண்மைதான். மருத்துவர் ஐயா மேல் எனக்கு பல விமரிசனங்கள் இன்னும் இருந்தாலும், இந்த விஷயத்தில் வேறு எந்த பதிலையும் தரவியலாதுதான். பாமகவால் நிர்வாக பயிற்சிகளுக்கென தனிப்பட்ட முகாம்கள் நடத்தப்படுவதும் இதற்கான காரணங்களுள் ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன். என்னைவிட பதிவர் குழலி இன்னும் அதிகம் கூறுவார்.

10. மும்பை, பெங்களூர் நகரங்களில் வாக்குப்பதிவு மிகக் குறைவாகவும், டில்லியில் பரவாயில்லை ரகத்திலும் சதவிகிதம். சென்னை மக்கள் வெயிலில் வெளியே வந்து ஓட்டுப் போட்டு புரட்சி பண்ணுவார்களா? இல்லை சன், கலைஞர் தொலைக்காட்சிகளில் சிறப்பு திரைப்படத்தில் மூழ்கி இருக்கப் போகிறார்களா?
பதில்: இங்கு ஓட்டுப்பதிவு அதிக அளவில் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் (12.05.2009, 12.34-க்கு கொடுத்த பதில் இது). பார்ப்போம்.
13.05.2009 இரவு 23.07 மணிக்கு வந்த செய்தி இது: 68 % வோட் தமிழ் நாட்டில் (கூடவே வன்முறை), 79 % பாண்டிச்சேரியில்.

சுதாகர்:
1. வருடத்திற்கு 364.5 நாட்கள் டில்லியிலும் (அல்லது சில நாட்கள் வெளி நாட்டிலோ) இருக்கும் மன்மோகன் சிங் ஏன் அசாமில் சென்று ஓட்டு போடுகிறார்? ராஜ்யசபா எம்.பி ஆவதற்கு வீடு அங்கு இருக்கவேண்டும் ஆனால் வசிக்கத் தேவையில்லையோ?
பதில்: எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் அசாமுக்கு உரிய ராஜ்யசபா சீட்டுக்கு தேர்வு பெற அங்குள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும் என்பதே.

2. அதேபோல சிதம்பரம் வசிப்பது சென்னையில் அல்லது டில்லியில். ஏன் சிவங்கை கண்டமனூரில் ஓட்டு போடுகிறார்?
பதில்: நான் உங்க வீட்டு பிள்ளை என்ற ரேஞ்சில் கூற இயலும் நிலைக்காக என நினைக்கிறேன்.

3. ஆழ்வார்பேட்டையில் பல்லாண்டுகளாக வசித்தும், பலமுறை தேர்தலில் ஓட்டு போட்ட கமல்ஹாசன் பெயர் ஏன் இந்த முறை வாக்காளர் பட்டியலில் இல்லை ? பரமக்குடியில் போய் ஓட்டு போடுங்கள் என்பார்களோ?
பதில்: நீங்க வேற, முழு தெருவே மறைந்து விடும்போது, ஒரு கமலஹாசன் ஏன் மறையக் கூடாது?

4. இது போன்ற பாடாவதி சட்டங்களை ஏன் எந்த அரசும் மாற்றுவதில்லை?
பதில்: இருக்கும் சட்டங்களெல்லாம் சரியாகத்தான் உள்ளன, ஆனால் நடைமுறைக்கு கொண்டு வருவதில்தான் குழப்பம் நிலவுகிறது. என் குடும்பதினரின் பெயர்கள் தவறான தெருவில் பதிவாகியுள்ளன, ஏனெனில் தகவல் உள்ளீடு செய்பவர்கள் அக்கறையாக செய்யவில்லை, அவர்களை செக் செய்ய வேண்டிய அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு டிக் அடித்திருக்கின்றனர். என்ன செய்யலாம்?


சேதுராமன்:
1. முடிந்து போன தேர்தல் பற்றிய உங்கள் சமீப கணிப்பு என்ன?
பதில்: தொங்கு பாராளுமன்றம்தான் வரும் என அஞ்சுகிறேன். பிறகு இருக்கவே இருக்கின்றன குதிரை பேரங்கள். பா.ஜ.க. 170 சீட்டுகளுக்கு மேல் பெற்றால் அது மதசார்பற்ற கட்சியாக பார்க்கப்பட்டுவிடும் என சோ கூறியது ஏற்கத் தக்கதே.

2. தேர்தல் முடிவுகள் வெளியானதும் ஒரு புதுக் கூட்டணி உருவாக சான்ஸ் இருக்கிறதா?
பதில்: புது கூட்டணி உருவாகாவிட்டால்தான் ஆச்சரியம்.

3. 1947ல் உருவான ஜன நாயகங்களில் ஏன் பாகிஸ்தான், மையன்மார் என்ற பர்மா, ஸ்ரீலங்கா சரியாக வளர்ச்சி பெறவில்லை? ஜன நாயகம் அவர்கள் மேல் திணிக்கப் பட்டதென்பதாலா? அல்லது நல்ல வழிகாட்டும் தலைவர்கள் இல்லாததாலா?
பதில்: இலங்கை தவிர மற்ற தேசங்களில் உள்ள checks and balances இந்தியாவில் இயங்கியதுபோல சரியாக இயங்கவில்லை. முக்கியமாக ராணுவத்துக்கு அரசியல் வேட்கைகளை அனுமதித்ததுதான் அத்தேசங்கள் செய்த பெரிய தவறு. அவற்றில் ஸ்ரீலங்கா கொஞ்சம் பரவாயில்லை என சேர்த்து கொள்ளலாம்.

அருண்குமார்:
1.பதினாறாம் தேதி தமிழ் நாட்டில் முடிவுகள் எப்படி இருக்கும் யூகிக்க முடிகிறதா?
அதிமுக:
திமுக:
காங்கிரஸ்:
பாமாக:
இ கம்:
வ கம்:
மதிமுக :
பாஜக:
பதில்: சான்ஸே இல்லை. நான் என்ன சொன்னாலும் அது ஊகமாகத்தான் இருக்கும், அதுவும் குருட்டாபோக்கு யூகம்.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

Anonymous said...

கெட்ட வார்த்தைகள் பற்றிய ஜெய மோகன் பதிவு படித்தீர்களா ?

பதிவுகளில் கெட்ட வார்த்தை உபயோகம் எப்படி இருக்கு ?

chandru

மணிஜி said...

படித்தேன்..ரசித்தேன்

வால்பையன் said...

//பல்லியை balli என்றுகூடத்தான் கூறுகின்றனர்.//

பல்லிக்கும் ,பள்ளிக்கும் உச்சரிப்பு “ப”வில் தான் மாறுகிறது!

அதே போல் கன்னி, கண்ணி இரண்டுக்கும் “க”வில் மாறுது,

ஆரம்பத்துலயே எதோ தப்பு நடந்துருக்கு!

வால்பையன் said...

//நீங்கள் சொல்வது போல மத்தியில் நடந்தால், தமிழகத்துக்கு இடை தேர்தல் வேண்டுமானால் வந்திடலாம்.//

காங்கிரஸுக்கு எதிரான கூட்டணின்னு அறிக்கை விட்டு, வைக்கோவும், ராமதாஸும் அங்க போய் சேர்ந்தாங்க,
திருப்பியும் காங்கிரஸ் கூட கூட்டணீ வச்சா எங்க போய் நிப்பாங்க?

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
நீங்கள் கேட்கும் கேள்வி சம்பந்தப்பட்ட கட்சிகள் சொரணையுடன் செயல்பட்டால் நடக்கும். ஆனால் அப்படியில்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@சந்துரு
ஜெயமோகனின் அப்பதிவை படித்துள்ளேன். கெட்ட வார்த்தைகள் அழுத்தங்களை குறைக்கும் பணியை செய்கின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

butterfly Surya said...

நல்லாயிருக்கு டோண்டு சார்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது