5/26/2009

எங்கே பிராமணன் - பகுதி - 79

பகுதி - 79 (25.05.2009):
நீலகண்டன் வீட்டில் தன் பெற்றோருடன் உமாவின் வாக்குவாதம் தொடர்கிறது. தான் மேஜர் என முதலில் கூறும் உமா, அப்படி தன் பெற்றோர்கள் தான் அசோக்கை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என முடிவு செய்தால், தனக்கு கல்யாணமே வேண்டாம் என தன்னால் இருக்க முடியும் என்றும் கூறுகிறாள். அதனால் எல்லாம் அசராத நீலகண்டன் தான் நாதனிடம் அவரது ஆஃபீசிலேயே போய் பேசுவதாக சொல்லி கிளம்புகிறார். பெண்ணின் பயமுறுத்தலை அவர் சீரியசாக எடுத்து கொள்ளவில்லை.

அவ்வளவு பெரிய மனிதர்கள் நாதனும் வசுமதியும், அவர்களே வந்து பெண் கேட்கும்போது அதை ஏன் கோட்டை விட வேண்டும் என உமா கேட்டு விட்டு, அப்பாவின் செல்போனுக்கு கனெக்‌ஷன் தந்து அவரை திரும்ப அழைக்குமாறு அம்மாவிடம் கூறுகிறாள். பர்வதமும் போனில் பேசி நீலகண்டனை வீட்டுக்கே வரச்சொல்லி விடுகிறாள். உமா மகிழ்ச்சியடைகிறாள், ஆனால் அது நீடிப்பதில்லை. ஏனெனில் அதே மூச்சில் அன்று மாலை தாங்கள் இருவருமாக சேர்ந்து போய் சொல்வதே மரியாதையாக இருக்கும் என அபிப்பிராயப்படுகிறாள். உமா திகைக்கிறாள்.

கிருபா வீட்டில் அவன் மாமனார் ஜட்ஜ் தன மகள் பிரியாவுடன் பேசி கொண்டிருக்கிறார். அன்று மாலை அவள் அன்னை அவளை பார்க்க வருவாள் என அவர் கூறுகிறார். சேர்ந்து வந்திருக்கலாமே என பிரியா கூற, அவள் அன்னை மஹிலா மண்டலி வேலையாக வெளியே சென்றிருப்பதாகவும், மாலை தனக்கு முக்கியமான மீட்டிங் இருப்பதாகவும் கூறுகிறார். அது என்ன மீட்டிங் என பிரியா கேட்கிறாள். பால்ய விவாகம் ஒன்று கும்பகோணத்தில் நடந்ததாகவும் அது சம்பந்தமான கேஸ் தன் முன்னால் வந்துள்ளதாகவும், அது பற்றிய பல விவரங்கள் தெரிந்து கொள்ளவே மீட்டிங்கிற்கு போகப் போவதாகவும் கூறுகிறார்.

“இது என்ன சார் பால்யவிவாகம், சின்ன பசங்களை அவங்களுக்கு விவரம் தெரியறதுக்கு முன்னாலேயே கல்யாணம் பண்ணித் தருவது? இதில் சென்ஸே இல்லையே” என சோவின் நண்பர் அங்கலாய்க்கிறார். சென்ஸ் இல்லைன்னு நண்பர் சொல்வதாலேயே அதில் ஒரு சென்ஸ் இருந்ததை சுட்டிக்காட்ட முற்படுகிறார் சோ. பால்ய விவாகம் தற்காலத்துக்கு ஒத்து வராது, முக்கியமாக இளம் விதவைகள் பிரச்சினை என ஒத்து கொள்கிறார் சோ அவர்கள். அதே சமயம் அது சமூகத்தில் புகுத்தப்பட்ட நாட்களில் அது ஒரு சென்சிபிளான நோக்கத்திலேயே நடந்தது எனவும் கூறுகிறார். அதாவது 25 வயதுக்கு மேல் ஒரு பென்ணை திருமணம் செய்து வைக்கும் நேரத்தில் அவள் தன் பிறந்தகத்து பழக்க வழக்கங்களில் அப்படியே ஊறிவிடுகிறாள். பிறகு புகுந்த வீட்டுக்கு சென்று முற்றிலும் மாறுபட்ட வழக்கங்களை கடைபிடிக்கும் காலக் கட்டத்தில் மனத்தளவில் பல இடையூறுகள் ஏற்பட்டு பல டென்ஷன்களுக்கு வழி வகுக்கிறது. இவை எல்லாமே பெண்ணை சிறு வயதில் மணம் செய்து தரும்போது ஏற்படாது, ஆகவே பால்ய விவாகத்தில் இந்த விஷயத்தில் சென்ஸ் இருந்தது என சோ சொல்கிறார்.

நாதன் வீட்டில் நீலகண்டன், வசுமதி மற்றும் நாதன் பேசுகின்றனர். அசோக் உமா திருமண சம்பந்தத்திற்கு நீலகண்டன் சம்மதித்ததாக நினைத்து முதலில் மகிழ்ச்சி அடைகிறார் நாதன். ஆனால் அப்படியில்லை என நீலகண்டன் நாசுக்காக தெரிவிக்க்க நாதன் புரிந்து கொண்டு அதை வசுமதிக்கும் தெரிவிக்கிறார். மனதுக்குள் எழுந்த மகிழ்ச்சியை மறைத்து கொண்டு வசுமதி தான் ரொம்ப ஏமார்றம் அடைந்தது போல பேசுகிறாள். நாதனுக்கு நிஜமாகவே ஏமாற்றம் இருப்பினும் சுதாரித்து கொள்கிறார். வழ்க்கம் போல நீலகண்டன் தன் வீட்டுக்கு போகவர இருக்க வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறார். உமாதான் இன்னும் பிரச்சினை செய்வதாக நீலகண்டன் குறைபட்டு கொள்கிறார். அதுவும் தனது தவறாலேயே என நாதன் மீண்டும் வருந்துகிறார்.

நாதன் அசோக்குடன் இது சம்பந்தமாக பேசுகிறார். இந்த வீட்டில் நடப்பது என்னவென்று அவன் அறிவானா என அவர் கேட்க, ஏற்கனவே குப்பை போல பல விஷயங்கள் மனதை ஆக்கிரமிக்கும்போது மேலும் விஷயங்களை தான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என அசோக் திட்டவட்டமாகக் கூறுகிறான். அவனை உலக வாழ்க்கைக்கு திருப்ப உமா அசோகை தனக்கு மணமுடித்து தருமாறு கேட்டது தெரியுமா என நாதன் கேட்க, அவன் தெரியாது என்கிறான். அதே போல வசுமதி நீலகண்டன் வீட்டிற்கு போய் உமாவை அசோக்குக்காக பெண் கேட்டது, அவர்கள் மறுத்தது ஆகிய எதுவுமே தெரியாது என மறுக்கிறான். அதே சமயம் உமா அசோக்கை மணமுடிக்க பிடிவாதம் காட்டுகிறாள் என நாதன் கூற, அசோக் அது வெறும் infatuation, அவள் வயதுக்கு வருவது புரிந்து கொள்ளக் கூடியதே என கூறிவிடுகிறான். தனக்கு உமாவை மட்டுமல்ல, வேறு எந்த பெண்ணையுமே மணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்பதையும் வெளிப்படையாகவே கூறுகிறான்.

இனிமேல் இங்கே உமா வரமாட்டாள் என நாதன் கூற, ஏன் அவளை தடுக்க வேண்டும், அவள் பாட்டுக்கு வந்து போய் கொண்டிருக்கட்டுமே என அசோக் கூறுகிறான். அசோக்கும் அவளை போய் பார்க்கக் கூடாது என நாதன் கூற, தான் அவ்வாறு செய்யப் போவதில்லை எனவும் அவன் கூறுகிறான். அதே சமயம் நாதனிடம் மேலும் கூறுகிறான். முதலில் உமாவின் உதவி கேட்டு லெட்டர் எழுதியது முதல் தவறு, தன்னை அவளுக்கு மணமுடிப்பதாக வாக்களித்தது இரண்டாம் தவறு, அவள் வீட்டுக்கு போய் பெண் கேட்டதோ எல்லாவற்றையும் விட மிகப் பெரிய தவறு என அவன் அடுக்க, நாதன் திகைக்கிறார். எல்லா விஷயங்களும் தெரிந்தும் அவன் ஏன் ஒன்றும் தெரியாது மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என அவர் திகைக்கிறார்.தனக்கு இது தேவை இல்லாததாலேயே தனக்கு ஏன் இந்த விவகாரம் என த்ள்ளியிருந்ததாகவே அவன் கூறுகிறான். முதலில் தன் மேல் லேசான அபிப்பிராயம் உமாவுக்கு இருந்திருக்கலாமென்றும், அதை ஊதி ஊதி பெரிதாக்கியது பெரியவர்கள் தவறு என்றும், இப்போது வெறும் சாதாரண தீப்பொறி பெரிய எரிமலையாக உருவெடுத்துள்ள நிலையில் அவர்கள் அதை வெறுமனே ஊதி அணைக்க விரும்புகின்றனர், முடிந்தால் ஊதுங்கோ அப்பா, ஊதுங்கோ எனவும் கூறுகிறான்.

உமா வீட்டில் நீலகண்டன் அவளுக்கு வரன் பார்க்க பேப்பரில் விளம்பரம் தந்திருக்கிறார். அதை அறிந்த உமா கோபப்படுகிறாள். தான் நர்சிங் படிக்கப் போவதாகவும், ஆஸ்திரேலியாவில் வேலை செய்யப் போவதாகவும் கூறும் அவள் எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டன என சொல்கிறாள்.

நீலகண்டன் நாதன் செய்ததையே தானும் செய்யப் போவதாகக் கூறி நாதனுக்கு ஒரு கடிதம் எழுதி, அதை தங்கள் பிள்ளை ராம்ஜியிடம் கொடுத்து, நாதன்வீட்டில் கொடுத்து விடுமாறு பர்வதத்திடம் கூறுகிறார். பர்வதம் கடிதத்தை படிக்கிறாள்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது