இன்று ஒரு ஃபோன்கால் வந்தது. எம்.எஸ்.சி படித்த ஒருவர் பேசினார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு தேவை என்றார். நான் விஷயம் என்ன எனக்கேட்டதற்கு அவரது பிறப்புச் சான்றிதழாம், அதை ஸ்பானிய மொழியில் மொழி பெயர்க்க வேண்டுமாம். அதற்கு முன்னோடியாக அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்தால் பிறகு ஸ்பானிய மொழிபெயர்ப்புக்காகும் என்பது அவரது கூற்று.
எனக்கு ஒரே ஆச்சரியம். பிறப்புச் சான்றிதழ் என்பது சில வரிகளே உள்ள ஒரு ஆவணம். அதை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்க இந்த எம்.எஸ்.சி. படித்தவருக்கு தெரியாதாம். இந்த அழகுக்கு ஸ்கூலில் தமிழில்தான் படித்திருக்கிறார். காலேஜில் பாடங்கள் ஆங்கிலத்தில். இவரால் இது முடியாது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
மேலே ஸ்பெயினில் எப்படி படிக்கப் போகிறார் எனக் கேட்டதற்கு அவர் போகுமிடத்தில் ஆங்கிலத்திலேயே சொல்லித் தருவார்களாம். இருக்கட்டும் ஸ்வாமி. ஆனால் இந்த சிறு காகிதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க துப்பில்லாதவர் என்னத்த படிச்சு, கிழிச்சுன்னுதான் சொல்லத் தோன்றுகிறது.
பலர் என்னிடம் இம்மாதிரி பிறப்புச் சான்றிதழ்களின் மொழிபெயர்ப்பை வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள்தான். ஆனால் அவை தமிழிலிருந்து நேரடியாக ஜெர்மன் அல்லது ஃபிரெஞ்சுக்கு மாற்றப்பட்டவை. அவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அதே சமயம் தமிழிலிருந்து ஆங்கிலம் அல்லது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புக்காக என்னைக் கேட்பது பெரும்பாலும் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்துதான். அங்கு இருக்கும் ஸ்ரீலங்கா அகதிகளுக்காக அந்தந்த நாட்டின் படிவங்கள் தமிழுக்கு மார்றப்பட வேண்டியுள்ளன. ஃபிரான்ஸ் ஜெர்மனியிலிருந்து வருபவை தனி.
வேறு சில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகளுக்கு தொழில்முறை பெயர்ப்பாளர் தேவை என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
இப்பதிவை நான் இட்டதன் நோக்கமே தமிழகத்தின் இதயத்தில் ஒரு புது தலைமுறை தமிழும் காலி ஆங்கிலமும் காலி என்ற நிலைக்கு வந்துள்ளது. அவர்கள் பிளஸ் டூவில் அதிக மதிப்பெண்கள் பெற எடுத்துக் கொண்ட ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு பற்றி கேட்கவே வேண்டாம்.ஒரேயடியாக வாஷ் அவுட்தான்.
நான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் சமீபத்தில் 1954-லிருந்து 1962 வரை படித்த காலத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் தலா 48 மாணாக்கர்களை கொண்ட மொத்தம் 10 செக்ஷன்களில் ஒன்றில் மட்டும் ஆங்கில மீடியம், மீதி எல்லாவற்றிலும் தமிழ் மீடியம். இப்போது அதே ஹிந்து உயர்நிலை பள்ளீயில் நிலைமை கிட்டத்தட்ட தலைகீழ் என கேள்விப்படுகிறேன்.
என்னைப் போன்றவர்களுக்கு இதனால் நல்ல மொழிபெயர்ப்பு வாய்ப்புகள் கிட்டும் என்றாலும் தமிழக இளைஞர்கள் தற்கால நிலை என் மனதை உறுத்துகிறது.
இத்தருணத்தில் தமிழகப் பள்ளிகளில் தமிழின் நிலை என்னும் எனது பதிவிலிருந்து சிலவரிகளை இங்கு தருவேன்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை என்பது ஒரு கசப்பான ஆனால் ஒத்துக் கொள்ளவேண்டிய உண்மையே. இந்த நிலை ஏன் என்பதை பார்ப்போம்.
முதல் காரணம் தமிழில் நல்ல பாடநூல்கள் வெளிவராததே. நான் 1962-ல் பள்ளியிறுதித் தேர்வு எழுதியபோது இருந்த நிலையைக் கூறுவேன். ஒன்பதாம் வகுப்புவரை தமிழிலேயே படித்து வந்த நான் பத்தாம் வகுப்பில் பொறியியலை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டபோது ஆங்கில மீடியத்துக்கே செல்ல வேண்டியிருந்தது. பொறியியல் பாடங்களுக்கேற்ற தமிழ் பாட நூல்கள் இல்லை என்பதுதான் காரணம். பொறியியல் எடுத்துக் கொள்ளாதவர்கள் கூட காம்போசிட் கணிதத்தை ஆங்கிலத்திலேயே கற்க வேண்டியிருந்தது. இதற்கும் அதுவே காரணம்.
இன்னுமொரு காரணம் மதிப்பெண்கள் அளிக்கும் முறை. என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழில் 60 மதிப்பெண்கள் போட்டாலே விசேஷம் என்ற நிலை. ஆனால் வடமொழி எடுத்துக்கொண்டால் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் சுலபம். பிற்காலத்தில் இந்த சாதகமான தன்மை ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு பாடங்களுக்கும் வந்தது. ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் பள்ளிகளில் கண்ராவியான முறையில் பிரெஞ்சு அல்லது ஜெர்மன் கற்பவர்கள் அவற்றை பிற்காலத்தில் சுலபமாக மறந்து விட்டனர். அதற்காக அவர்கள் கவலைப்படவுமில்லை. அவர்களுக்கு வேண்டியது நல்ல மதிப்பெண்கள். அவற்றின் மூலம் நல்ல கோர்ஸுகளில் இடம் கிடைத்தால் போதும். இது பற்றி பிறகு. ஆனால் தமிழில் இம்மாதிரி ஆகாது, ஏனெனில் அது நமது தாய்மொழி.
இப்போது நாம் தமிழைப் பார்ப்போம். யுத்தகால அடிப்படையில் வேலை செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் தமிழ் கட்டாயமாக சாய்சில் இருக்க வேண்டும். தமிழில் மதிப்பெண்கள் வழங்குவதில் தாராளம் காட்டப்பட வேண்டும். தமிழாசிரியர்கள் தங்களை நக்கீரன் ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்வது நிற்க வேண்டும்.
தமிழாசிரியர்களும் சீனியாரிட்டி அடிப்படையில் தலைமை ஆசிரியர்களாக வரவேண்டும். இது முக்கியம். பதவி வந்தாலே மரியாதையும் வரும்.
மற்றப்படி தமிழ் மீடியத்தை கட்டாயமாக்கவேண்டும் என்பது இப்போதுள்ள நிலையில் ப்ராக்டிகல் இல்லைதான். படிப்பதற்கு தேவையான அளவில் மாணாக்கர்கள் வர வேண்டும், பாட நூல்கள் பல தமிழில் வேண்டும், இத்யாதி, இத்யாதி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
7 hours ago